”படைப்பால் மட்டுமல்ல பண்பாலும் உயர்ந்தவர்..”! வதந்திகள் வேதனை அளிப்பதாக ஏஆர் ரஹ்மான் மகன் பதிவு!
தமிழ் மற்றும் இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்துவரும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் திருமண உறவிலிருந்து பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளனர். அவர்களின் இந்த அறிவிப்பால் 29 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
30 வருட பந்தத்தை சேர்ந்து கொண்டாட முடியாதவகையில் சில விசயங்கள் மாறிவிட்டதாக தம்பதியினர் தெரிவித்திருக்கும் நிலையில், நன்றாக இருந்த தம்பதியின் பிரிவு எதனால் ஏற்பட்டது? அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து பல கருத்துகளும், வதங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சார்ந்து சில மோசமான வதந்திகளும் வெளிவந்த நிலையில், அப்படியான கருத்துகளும் வதந்திகளும் வேதனையளிப்பதாக ரஹ்மானின் மகன் அமீன் வெளிப்படுத்தியுள்ளார்.
படைப்புகளால் மட்டுமல்ல பண்பாலும் உயர்ந்தவர்..
பரப்பப்படும் வதந்திகள் வேதனையளிப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கும் அமீன், “என் அப்பா ஒரு லெஜண்ட். தன் படைப்புகளால் மட்டுமல்ல... தன் பண்புகள், மரியாதை, அன்பு அனைத்தினாலும் ஒரு லெஜண்ட்டாக இருக்கிறார் அவர். அவரைப்பற்றி இப்படி அடிப்படை ஆதாரமற்ற, தவறான தகவல்கள் பரவுவது வேதனையளிக்கிறது.
இன்னொருவர் வாழ்க்கையை பற்றி பேசுகையில், அதில் உண்மையும் மரியாதையும் இருக்கவேண்டும் என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். தவறான தகவல்களை பரப்புப்புவதை தயவுசெய்து ஊக்குவிக்காதீர்கள்” என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.