பொள்ளாச்சியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நடிகை அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் படப்பிடிப்புகள் தினமும் நடைபெற்று வருவது வழக்கம். பல முன்னணி நடிகர், நடிகைகள் இங்கு வந்து செல்வர்.
இந்நிலையில் நடிகை அனுஷ்கா பங்குபெறும் தெலுங்கு படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பு பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரத்தில் நடைபெற்றது. அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவன் படப்பிடிப்பு முடிந்து பொள்ளாச்சி நோக்கி வந்தது. அப்போது வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கேரவன் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கேரவன் பறிமுதல் செய்யப்பட்டபோது கேரவனில் அனுஷ்கா இல்லை.
மேலும் இந்த வாகனத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் வரி பாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கேரவனின் உரிமையாளர் இளங்கோவனிடம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.