தொடர்ந்து மிரட்டல்: ட்விட்டரில் இருந்து வெளியேறினார் அனுராக் காஷ்யப்

தொடர்ந்து மிரட்டல்: ட்விட்டரில் இருந்து வெளியேறினார் அனுராக் காஷ்யப்

தொடர்ந்து மிரட்டல்: ட்விட்டரில் இருந்து வெளியேறினார் அனுராக் காஷ்யப்
Published on

தனக்கும் குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் வருவதால் ட்விட்டரில் இருந்து விலகுவதாக இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற பின், ஏராளமான திரை பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் அந்த கட்சிக்கும் மோடிக்கும் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பிரபல இந்தி பட இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், “டியர் மோடி சார், உங்களது வெற்றிக்கு வாழ்த்துகள், ஆனால் உங்களின் எதிர்ப்பாளனாகிய எனது மகளை உங்களது தொண்டர்கள் வெற்றியை கொண்டாடுகிறோம் என்ற நோக்கத்தில் மிரட்டியுள்ளனர். தயவு செய்து இப்படிப்பட்ட
தொண்டர்களை எப்படி சமாளிப்பது எனச் சொல்லி கொடுங்கள் என்று கூறியிருந்தார். இவர் தமிழில், நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

காஷ்யபின் இந்த பதிவுக்கு ’த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் அசோக் பண்டிட், ‘இந்தச் செய்தி போலியானது. நாடே மோடியின் வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில் மோடியின் மீது அவதூறு
ஏற்படுத்துவதற்காக ‘அர்பன் நக்ஸல்ஸ்’ போட்டோ ஷாப் மூலம் இதை செய்துள்ளனர். எனக்கு இதே போல் சூழ்நிலை அமைந்தபோது நான் காவல்துறையில் புகார் செய்தேன்’’ என்று கூறியிருந்தார். 

இதனால் கோபமடைந்த அனுராக், “இந்த மிரட்டல் இன்ஸ்டாகிராமில் உள்ளது. ஆகவே ட்விட்டரில் தேடுவதை நிறுத்தி விட்டு, நீங்கள் தயவு செய்து இன்ஸ்டாகிராமில் தேடுங்கள்” என்றார். அதையொட்டி இந்த விவாதம் வலுத்தது. 

இதற்குப் பதிலளித்த அசோக் பண்டிட்,  “நான் போலீசில் புகார் செய்யுங்கள் எனக் கூறியதை படிக்கவில்லையா? இதற்கு பிரதமர் என்ன செய்யமுடியும்? இது மட்டுமல்லாமல் இதை கவனிக்கதான் தனித்தனியான துறைகள் இருக்கிறேதே?” என கூறியிருந்தார். மேலும் மோடியின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத அனுராக், குடிபோதையில் பேசுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் இந்த விவகாரம் பரபரப்பானது. இந்நிலையில் அவருக்கும் அவரது பெற்றோருக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார். 

அவரது கடைசி பதிவில், ‘’இது எனது கடைசி ட்வீட். இதிலிருந்து விலகுகிறேன். பயமின்றி என் மனதில் உள்ளதை பேச அனுமதிக்கப்படாதபோது, நான் பேசாமலேயே இருக்கலாம். உங்கள் பெற்றோருக்கு போனில் கொலை மிரட்டலும் மகளுக்கு ஆன்லைனில் மிரட்டலும் வரும்போது யாரும் பேச விரும்பமாட்டார்கள் என்பது தெரியும். குண்டர்கள் ஆட்சிக்கு வரும் போது, வன்முறைதான் வாழ்க்கை முறையாக இருக்கும். இந்த புதிய இந்தியாவில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் செழித்து வளர்வீர்கள் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com