’மவுனப் படமில்லை’: மன்மோகன் சிங் படம் குறித்து அனுபம் கெர் விளக்கம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்த தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படம் மவுனப் படமில்லை என்று நடிகர் அனுபம் கெர் விளையாட்டாகக் குறிப்பிட்டார்.
இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைப் பிரகடனத்தின் போது நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மதுர் பண்டார்கர் இந்து சர்க்கார் என்ற பெயரில் படம் இயக்கி வருகிறார். படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் அனுபம் கெர் கலந்துகொண்டார். அவர் நடித்து வரும் தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த அனுபம் கெர், படம் குறித்த தகவல்களை வெளிவிட மாட்டேன் என்ற உறுதிமொழியுடனேயே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன். இருப்பினும் ஒரு தகவலை உங்களுக்குக் கூறுகிறேன். தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படம் நிச்சயமாக மவுனப் படம் இல்லை என்று அவர் விளையாட்டாகக் குறிப்பிட்டார். நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, அவர் மவுனமாக இருப்பதாக ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது. பாஜக ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங் கதாபத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.