ஆஸ்கரின் புதிய உறுப்பினர்களாக அனுராக் காஷ்யப், அனுபம் கெர் நியமனம்!
ஆஸ்கர் அமைப்பின் புதிய உறுப்பினர்களாக இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், நடிகர் அனுபம் கெர் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
ஆஸ்கர் விருதுகளில் பன்முகத்தன்மை இல்லை என்று எழுந்த விமர்சனத்தை அடுத்து, விருதுக்கானவர்களைத் தேர்வு செய்வதற்காக, புதிய உறுப்பினர்களை அழைக்க ஆஸ்கர் அமைப்பு முடிவு செய்தது. அதன்படி கடந்த சில வருடங்களாக புதிய உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, அடுத்த வருடம் நடக்கும் ஆஸ்கர் விருதுக்கு 59 நாடுகளில் இருந்து 842 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இதில் 21 பேர் ஆஸ்கர் விருது பெற்றவர்கள், 82 பேர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்.
இந்தியாவில் இருந்து இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், நடிகர் அனுபம் கெர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக் கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனுபம் கெர், பிரபல இந்தி நடிகர். ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர்களுக்கான பிரிவுக்கும் ஸோயா அக்தர் இயக்குனர்களுக்கான பிரிவுக்கும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர் பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தரின் மகள்.
நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப், குறும்படம் மற்றும் அனிமேஷன் பட பிரிவுக்கு உறுப்பினராக அழைக்கப்பட்டுள்ளார்.
(ஸோயா அக்தர்)
இவர்கள் தவிர, ’லஞ்ச் பாக்ஸ்’ என்ற இந்தி படத்தின் இயக்குனர் ரிதேஷ் பத்ரா, இந்திய வம்சாவளி நடிகர் ஆர்ச்சி பஞ்சாபி, ’லேட் நைட்’ இயக்கு னர் நிஷா கனட்ரா, ’பாகுபலி’, ’2.0’ படங்களின் விஷூவல் எபெக்ட் பிரிவில் பணியாற்றிய ஸ்ரீனீவாஸ் மோகன் ஆகியோரும் புதிய உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், விருதுக்கானவர்களை வாக்களித்து தேர்வு செய்வார்கள்.
கடந்த வருடம், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், நஸ்ருதீன் ஷா, மாதுரி தீட்சித், தபு உள்ளிட்டோரை ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக நியமித்திருந்தது.