எனக்கு தங்கச்சி இல்லை என்று அஞ்சலி பதறியது ஏன்?
எனக்கு தங்கச்சியே இல்லை என்றும் ஒரே ஒரு அக்காதான் என்றும் சில தினக்களுக்கு முன்பு அஞ்சலி பதறிப்போய் ட்விட்டரில் கூறியிருந்தார். திடீரென்று அவர் ஏன் அப்படிக் கூறினார் என ஒரு குழப்பம் நிலவியது. அந்தக் குழப்பத்திற்கு தற்சமயம் விடை கிடைத்திருக்கிறது.
அஞ்சலிக்கு தங்கை இல்லை என்பது உண்மைதான். ஆனால் கூட பிறக்காத ஒரு தங்கை இருப்பது உண்மை. அஞ்சலி தமிழில் அறிமுகமான போது அவருடனேயே இருந்தவர் அவரது சித்தி பாரதி தேவி. அஞ்சலி பெரிய நடிகையாக வளர்ந்ததும் சித்திக்கும் அவருக்கும் நடுவில் சில குடும்ப பிரச்னைகள் ஏற்பட்டன. நடுவில் இயக்குநர் களஞ்சியம் பெயரும் அடிப்பட்டது. இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க அஞ்சலி சில மாதங்கள் சினிமாவில் இருந்து விலகினார். அவர் எங்கே இருக்கிறார் என்பது கூட ரகசியமாக இருந்தது. பிறகு அவர் மீண்டும் நடிக்க வந்தார்.
இந்நிலையில் சித்தி பாரது தேவியின் மகள் ஆராத்யா தற்சமயம் நடிக்க வந்துள்ளார், அவர் விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் கதாயாயகியாக அறிமுகமாக இருக்கிறார். அப்படி ஒரு அறிமுக விழாவில் கலந்து கொண்ட ஆராத்யா பழைய பாசத்தில் அஞ்சலி என் சகோதரிதான் என கூறியிருக்கிறார். அதை தெலுங்கு மீடியா உலகம் அஞ்சலியின் தங்கை நடிக்க வந்துள்ளதாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன. அதை கண்டுதான் வேக வேகமாக அஞ்சலி மறுத்திருக்கிறார்.
ஆனால் இந்த விவகாரம் குறித்து பேசிய ஆராத்யா, என் அக்காதான் எனக்கு ஊக்கமாக இருந்தவர். இப்போதும் அவர்தான் இருக்கிறார். அவர் இந்தளவுக்கு பெரிய நடிகையாக வளர்ந்ததை பார்த்துதான் நானும் நடிக்க வந்துள்ளேன். அவர் வேண்டுமானால் என்னை சகோதரி இல்லை என கூறலாம். அவர் அப்படி சொல்லிவிட்டால் உண்மை மாறிவிடாது என்று குறிப்பிட்டுள்ளார்.