நடிகை அஞ்சலி தனது 10 வது ஆண்டை இன்று கொண்டாடி வருகிறார்.
கற்றது தமிழ் படத்தின் மூலம் 2007ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சலி. இந்தப் படத்தை ராம் இயக்கி இருந்தார். முதல் படத்தில் இவர் ஏற்றிருந்த ஆனந்தி கதாபாத்திரம் பரவலாக கவனம் பெற்றது. அதில் மிக சிறப்பாக நடித்திருந்ததற்காக ஃபிலிம் ஃபேர் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது. 2010ல் அங்காடி தெரு மூலம் முதல் படத்தை தாண்டி அதிகம் முன்னேறினார் அஞ்சலி. அந்த ஆண்டுக்கான சிறந்த நடிகை ஃபிலிம்ஃபேர் விருதை தட்டிக் கொண்டும் சென்றார். அதன் பின் இவர் தமிழ் சினிமாவில் தனக்கென தனியான இடத்தை தக்க வைத்தார். எங்கேயும் எப்போதும், இறைவி என தனித்த அடையாளங்களை இவர் எட்டிப் பிடித்திருந்தாலும் சில சொந்தப் பிரச்னைகளால் தொடர்ந்து இவர் நடிப்பதில் சிக்கல்கள் நீடித்தன.
இந்நிலையில் இன்றோடு அஞ்சலி நடிக்க வந்து 10 ஆண்டுகள் முடிந்துள்ளன. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இந்தளவுக்கு நான் காலூன்றி நிற்பதற்கு நீங்கள்தான் காரணம். அதற்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இனி இன்னும் கடுமையாக உழைப்பேன். உங்களை மேலும் எண்டர்டெய்ன் செய்வேன்" என்று கூறியிருக்கிறார். 10 ஆண்டு விழாவையொட்டி இவரது நடிப்பில் வெளிவர உள்ள பலூன் தெலுங்குப் பட போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.