அனிதா வீடு சென்று ஆறுதல்... விஜய் ரசிகர்களால் சேரன் நெகிழ்ச்சி
அனிதா வீட்டிற்கு ஆறுதல் சொல்லச்சென்றதை பாராட்டி பதிவிட்டுள்ள கருத்துக்கு விஜய் ரசிகர்கள் தொடர்ந்து நன்றி தெரிவித்து வருவதாக சேரன் நெகிழ்ச்சி அடைந்த்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்ட அனிதா வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். இதனை, ஆதரிக்கும் விதமாக இயக்குநரும், நடிகருமான சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அனிதாவின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னது மனதில் பதிகிறது.. பாராட்டமாட்டேன் ஏனெனில் இது உங்கள் கடமை. தொடருங்கள்." என விஜய்க்கு அறிவுறுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சேரனுக்கு நன்றி சொல்லி வருகின்றனர். இதுகுறித்து மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சேரன் "அனிதா வீட்டுக்குசென்ற விஜய்க்கு உணர்வுரீதியாக பதிவிட்டேன். விஜய் ரசிகர்கள் எனக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கீங்க. சொல்ல வேண்டியது விஜய்க்குத்தான்" என நெகிழ்ந்துள்ளார்.