ஆந்திராவின் அஜித்குமார் ‘பவன் கல்யாண்’ பிறந்தநாள் இன்று..!

ஆந்திராவின் அஜித்குமார் ‘பவன் கல்யாண்’ பிறந்தநாள் இன்று..!
ஆந்திராவின் அஜித்குமார் ‘பவன் கல்யாண்’ பிறந்தநாள் இன்று..!

‘மக்களின் மனநிலையை அறிந்து கொண்டு செயல்படுபவன் தான் உண்மையான தலைவன், அது தான் பொறுப்பான அரசியல் கட்சியின் தேவை' என நிஜ வாழ்க்கையில் பன்ச் வசனம் பேசுபவர் தெலுங்கு நடிகரும், ‘ஜன சேனா’ கட்சியின் தலைவருமான பவன் கல்யாண்.

இவரை ஆந்திராவின் அஜித் குமார் என்றும் சொல்லலாம். அவருக்கு இன்று பிறந்த நாள்.  

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பாபட்லாவில் 1971 இல் பிறந்தவர். தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்ஜீவியின் ஆசை தம்பி தான் பவன் கல்யாண். 

அண்ணனை பின்பற்றி 1996 இல் தன் முதல் படத்தில் நடித்தார் பவன். அவரது இயற்பெயர் கொனிடெல்லா கல்யாண் பாபு. முதல் படத்திற்கு மட்டும் தான் சிரஞ்ஜீவியின் பெயரை விசிட்டிங் கார்டாக பயன்படுத்தினார். அதற்கடுத்து தன் முயற்சியாலும், நடிப்பாலும் ஆந்திர மக்களின் மனத்தை கவர்ந்து பல படங்கள் ஹிட் கொடுத்து பவர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். 

தெலுங்கு சினிமாவுக்கு தேவையான மசாலா பார்மட் படங்களை நடித்து கொண்டே எதார்த்த சினிமாவிலும் நடித்து அசத்தினார். ஏ, பி, சி என ஆல் கிளாஸ் பேன் பேஸை கொண்டவர்.

2008 இல் சிரஞ்ஜீவிக்கு அரசியல் ஆசை வர 'பிரஜா ராஜ்ஜியம்' என்ற கட்சியை நிறுவினார் சிரஞ்ஜீவி. கட்சியை ஆரம்பித்த அடுத்த ஆண்டே ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. 

அண்ணனின் வெற்றிக்காக தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார் பவன். சிரஞ்ஜீவி திருப்பதி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். மாநில அரசியலில் சரிவர ஜொலிக்க முடியாததால் 2011 இல் காங்கிரஸ் கட்சியோடு தன் கட்சியை இணைத்தார் சிரஞ்ஜீவி. அண்ணனின் அரசியல் போக்கு பிடிக்காமல் போக அண்ணனை விட்டே பிரிந்தார் பவன்.

அரசியலே வேண்டாமென முடிவெடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இருந்தாலும் ஆந்திர மக்களின் நலனுக்காக தன்னால் முடிந்ததை செய்ய வேண்டுமென்ற முனைப்போடு ரசிகர் மன்றங்கள் மூலமாக வழக்கமான சினிமா நட்சத்திரங்கள் போல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். அந்த சமயத்தில் தான் 2014 பொது தேர்தல் வந்தது. எப்படியும் அண்ணனோடு கைகோர்ப்பார் பவன் என ஆந்திர மக்கள் எதிர்பார்த்திருக்க 'ஜன சேனா' என்ற கட்சியை  துவக்கினார். 

ஆந்திர மாநிலத்தின் உச்ச நட்சத்திரம் பவன் கல்யாண் தனி கட்சி துவங்கியதை செய்தியாக வெளியிட்டது மீடியாக்கள்.

‘ஜன சேனா கட்சியின் ஐடியாலஜி குறித்த விவரங்களை ‘இஸம்’ என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டிருந்தார் பவன் . அதுவே ஆந்திர அரசியலுக்கும், மக்களுக்கும் புதிது தான். பொறுப்பான அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தான் இந்த சமூகத்திற்கு தேவை என்பது தான் அவரது ஐடியாலஜி’ என்கிறார் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் திருப்பதியை சேர்ந்த துளசி குமார்.

வறட்சி, விவசாயிகளின் அவல நிலை, குடிநீர் பஞ்சம் என மக்கள் பிரச்சனைகளுக்காக வாய்ஸ் கொடுப்பவர் பவன்.

ஆந்திர மாநில மக்களின் மனதை கவர்ந்த பவன் கல்யாண் தற்போது அதை ஓட்டுகளாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார் எனவும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

எது எப்படி இருந்தாலும் ஆந்திர மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்டு அதற்கான தீர்வுகளை கொண்டு வரும் அரசியல் தலைவராக பவன் உருவாகி வருகிறார். 

ட்விட்டர், யூட்யூப், பேஸ்புக் என இளைய தலைமுறைகளை கவர அனைத்து பணிகளையும் பவன் கல்யாண் செய்து வருகிறார். 

மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைவர் என்ற உயரத்தை நோக்கி பயணம் செய்து வருகிறார் பவன் கல்யாண்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com