ராஜன்
ராஜன் முகநூல்

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | வட சென்னையிலிருந்து ‘ராஜன்’

இந்த வாரம் ‘ மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘'வடசென்னை” திரைப்படத்தில் அமீர் ஏற்று நடித்திருந்த ‘ ராஜன் ’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
Published on

இயக்குநர்கள் நடிகர்களாக உருமாறுகிற பட்டியலில் அமீரும் இருக்கிறார். அவர் இயக்கிய சொற்பமான  திரைப்படங்களில் மறக்க முடியாதது ‘பருத்தி வீரன்’. போலவே அவர் நடித்ததில் மறக்க முடியாத கேரக்டர் ‘ராஜன்’ (வட சென்னை). 

தான் வாழ்கின்ற பகுதியின் மண்ணையும் மக்களையும் உண்மையாகவே நேசிக்கிற ஒருவன், அந்த மக்களின் தன்னிச்சையான தலைவனாகிறான். மதுவிற்காகவும் பிரியாணிக்காகவும் பொய்யான கோஷம் போட்டு வாழ்த்தாமல் உண்மையாகவே அவனை மக்கள் மனதார தலைவனாக ஏற்றுக் கொள்கிறார்கள். ராஜன் அப்படியொரு தலைவனாக, வட சென்னையின் மீனவ சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் காரெக்டர். 

ராஜன் - அமீர் நடித்ததிலேயே  சிறந்த கேரக்டர்

இந்தப் பாத்திரத்தில் அமீரின் நடிப்பு சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. போருக்குச் சென்று வெற்றி பெருமித்துடன் திரும்பும் குறுநில மன்னனைப் போலவே ராஜனின் அறிமுகக் காட்சி காட்டப்படுகிறது. கப்பலில் வரும் வெளிநாட்டு சரக்குகளை படகில் கடத்திக் கொண்டு வந்து உள்ளூர் வியாபாரிகளுக்கு தரும் நிழலான பணியை ராஜன் செய்கிறார். 

படகிலிருந்து இறங்கும் ராஜன், மணலில் கோலி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்த்து “கோலி விளையாடாதீங்க.. கேரம் விளையாடுங்கன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்?” என்று செல்லமாக அதட்டுகிறார். கேரம் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டக்காரனமாக ஆவதின்  மூலம் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசுப் பணியில் இணைய முடியும், இதன் மூலம் அந்தப் பகுதியின் இளைஞர்களின் வாழ்க்கை மேம்படும் என்கிற தொலைநோக்குப் பார்வை ராஜனிடம் இருக்கிறது. 

அன்புவுடனான (தனுஷ்)  அவரது உறவு, ராஜனின் இந்த பரிணாமத்தை தெளிவாக காட்டுகிறது., ராஜன் தனது இளமை காலத்தை அன்புவின் வழியாக காண்கிறார். அன்புவிற்கு ஒரு வழிகாட்டியாக இருந்து, தனக்கு பிறகு வடசென்னையை வழிநடத்த தயார் செய்கிறார். இந்த வழிகாட்டுதலில், வட சென்னையின் இருண்ட பக்கத்தையும் அன்புவுக்கு அறிமுகப்படுத்துகிறார். அன்புவுடனான ராஜனின் உறவு, படத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று. 

 “தவ்ளூண்டு ஆங்கர்தாண்டா அவ்ள பெரிய கப்பலையே நிறுத்துது”

அழுத்தி வாரப்பட்ட சுருள் முடி, அடர்த்தியான தாடி, மீசை, எண்ணைய் வடியும் முகம், அடர்நிறத்தில் சட்டை, அதில் தொங்கும் கூலிங்கிளாஸ் என்று ராஜனின் தோற்றம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியின் அரசியல் பிரமுகராக இருக்கும் முத்துவை (ராதா ரவி) சந்திக்கச் செல்லும் ராஜன், படிக்கட்டுகளில் துள்ளலாகவும் விரைவாகவும் ஏறும் பாணி எம்.ஜி.ஆரின் உடல்மொழியை நினைவுப்படுத்துவதாக இருக்கிறது. 

‘அடுத்த வருஷம் போப் ஆண்டவர் நம்ம ஊருக்கு வருகிறார். அதையொட்டி கடற்கரையை தூய்மைப்படுத்த அரசு முடிவெடுத்திருக்கு. ஜனங்களுக்கு இலவசமா வீடு கட்டித் தருகிறோம்’ என்று முத்து சொல்கிற திட்டத்தின் பின்னால் இருக்கிற சூழ்ச்சியை புரிந்து கொள்கிற அறிவு ராஜனுக்கு இருக்கிறது. நகர்மயமாக்கம் என்கிற பெயரில் ஒரு பகுதியின் பூர்வகுடிகளை நகரத்திற்கு அப்பால் வெளியே தூக்கியெறியும் ‘தூய்மையாக்கம்’ இன்று வரை தொடரும் அவலமாகவே இருக்கிறது. 

இதற்காகவே முத்துவை பகைத்துக் கொள்ளும் ராஜன், காவல்துறையின் அடக்குமுறையை எதிர்கொள்ள நேர்கிறது. இதை துணிச்சலாக எதிர்கொள்ளும் ராஜன் “தவ்ளூண்டு ஆங்கர்தாண்டா அவ்ள பெரிய கப்பலையே நிறுத்துது” என்று பேசும் பன்ச் வசனம் புகழ் பெற்றதாக மாறியிருக்கிறது. கடலை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் மக்களை அங்கிருந்து தந்திரமாக அப்புறப்படுத்தும் அரசியல் சூழ்ச்சியை தனது துணிச்சலால் ராஜன் தடுத்து நிறுத்துகிறார். 

வடசென்னை திரைப்படத்தின் ஆதார அச்சு - சந்திரா

இதற்கு இடையில் சந்திரா (ஆண்ட்ரியா) என்கிற பெண்ணின் காதலை ராஜன் எதிர்கொள்ளும் காட்சிகள் சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன். ராஜனிடம் உள்ள தலைமைப் பண்பு, வீரம், மக்கள் நலனுக்கான சிந்தனை, நற்குணம் போன்ற காரணங்களால் சந்திரா ஈர்க்கப்படுகிறாள். மகாபாரதத்தின் பாஞ்சாலி பாத்திரம் மாதிரி, வட சென்னை திரைப்படத்தின் ஆதாரமான இயக்கமே சந்திராவின் சபதம் மற்றும் பழிவாங்கல் மீது கட்டமைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. 

ராஜன் கதாபாத்திரம், வெறுமனே ஒரு ரவுடி அல்ல. வட சென்னையின் அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக, அவர்களின் வலி, வேதனை மற்றும் கனவுகளை சுமந்து நிற்கும் ஒரு ஆளுமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

வெற்றிமாறன் இயக்கிய இந்தத் திரைப்படத்தில் ராஜன் வட சென்னையின் ஆன்மாவாகவே திரையில் தோன்றுகிறார். ஆரம்பத்தில், ராஜன் ஒரு தலைவனாக, மக்களின் பாதுகாவலனாக சித்தரிக்கப்படுகிறார். மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்காக, அவர்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு போராளியாக தோன்றுகிறார். 

அதிகாரத்தின் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அவரின் தைரியம், மக்களிடையே அவருக்கு ஒரு தனி மரியாதையை பெற்றுத் தருகிறது. அவர்களின் தேவைகளை உணர்ந்து, அவர்களுக்காக போராடும் ஒரு தலைவனாக அவர் மாறுகிறார்.

ஆனால், அதிகாரம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறது. அதிகாரத்தின் சுழலில் அவர் சிக்கிக் கொள்கிறார். சூழ்நிலைகளின் நெருக்கடியால், அவர் வன்முறையை கையாள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அவர் நம்பியவர்களாலேயே அவர் காட்டிக்கொடுக்கப்படும் போது, அவரது நம்பிக்கை சிதைந்து போகிறது.

ராஜன் -  ஒடுக்கப்படுகிற சமூகத்தின் நாயகன்

ராஜனின் மரணம், படத்தின் மையக் கருத்தை உணர்த்துகிறது. அதிகாரமும் வன்முறையும் ஒரு சுழற்சியாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவர் யாரை நம்பினாரோ, அவர்களாலேயே கொல்லப்படுகிறார். அவரது மரணம், வட சென்னையின் இழப்பை மட்டுமல்ல, அதிகாரத்தின் ஆபத்தையும், துரோகத்தின் வலியையும் உணர்த்துகிறது.

ராஜன் கதாபாத்திரம், ஒரு சிக்கலான மனிதனின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. அவர் நல்லவரா, கெட்டவரா என்று பிரித்து பார்க்க முடியாத ஒரு கதாபாத்திரம். வட சென்னையின் சூழலில், அவர் எடுத்த முடிவுகள், அவரது போராட்டங்கள், அவரது தோல்விகள், எல்லாமே அவரது மனிதத்தன்மையை காட்டுகிறது. 

ஒடுக்கப்படுகின்ற எந்தவொரு சமூகத்தில் இருந்தும், அவர்களைப் பாதுகாப்பதற்காக அவர்களின் மத்தியில் இருந்து ஒரு பிரதிநிதி உருவாகி பிறகு தலைவனாவது இயல்பான அம்சம். அவர்களின் நலனுக்காக அவன் பாடுபடுவான். பிறகு அந்த மக்களில் ஒருவனாலேயே கொல்லப்படுவான். 

பெரும்பாலான தலைவர்களின் வரலாறு இப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. வட சென்னை மீனவ சமூகத்தின் தன்னிச்சையான தலைவனாக உருமாறுகிற ராஜன், நண்பர்களாலேயே கொல்லப்படுவது ஒரு துயரமான காவியத்தின் இருண்ட பக்கமாக மாறுகிறது. தனது சிறப்பான நடிப்பு காரணமாக ராஜன் என்கிற கேரக்டரை மறக்க முடியாததாக மாற்றியிருக்கிறார் அமீர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com