மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்முகநூல்

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் (83)|மகனை கலாய்க்கும் அம்மா கேரக்டெரில் ’ஊர்வசி’!

இந்த வாரம் ‘ மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் ’ தொடரில் ‘'சிவா மனசுல சக்தி ” திரைப்படத்தில் 'ஊர்வசி’ ஏற்று நடித்திருந்த கல்யாணி  கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
Published on

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

பொதுவாக சினிமா அம்மாக்கள் என்றால் அழுது புலம்பி, சென்டிமென்ட் கண்ணீர் சிந்தி, மகன் மீது கண்மூடித்தனமாக பாசம் வைக்கிறவர்களாக இருப்பார்கள். ஆனால் தன் மகனையே கன்னாபின்னாவென்று பங்கமாக கலாய்க்கிற அம்மா சற்று வித்தியாசம்தான் இல்லையா?!. 

‘சிவா மனசுல சக்தி’ திரைப்படத்தில் ஊர்வசி ஏற்ற பாத்திரம் அப்படியொரு ரகளையான அம்மா கேரக்டர். இப்படியொரு ஜாலியான அம்மாவை நிஜத்தில் கூட பார்த்து விட முடியும். ஆனால் சினிமாவில் மிக  அரிதானது.  நகைச்சுவை நடிப்பு என்பது மிக இயல்பாக வெளிப்படும் ஊர்வசி இந்தக் கேரக்டரை அநாயசமாக கையாண்டிருந்தார்.

கல்யாணி - கண்ணீர் சிந்தாத ஜாலியான அம்மா

”சிவா மனசுல சக்தி’ படத்துல நடிக்கணுமா, வேண்டாமான்னு ஆரம்பத்துல குழப்பமா இருந்தது. சிவா மாதிரி ஒரு வளர்ந்த இளைஞனுக்கு அம்மா பாத்திரமான்னு தோணுச்சு. எப்படி கையாள்றதுன்னு தெரியல. அப்பதான் டைரக்டர் வந்து “ நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க.. நீங்க இயல்பான வாழ்க்கைல எப்படி இருப்பீங்களோ.. அப்படியே இதில நடிங்க போதும்ன்னு சொன்னார். என்னமோ நடிச்சு முடிச்சேன். ஆனா இந்த அளவுக்கு ரீச் ஆகும்ன்னு அப்ப தெரியாமப் போச்சு ” என்று ஒரு நோ்காணலில் சொல்லிச் சிரிக்கிறார் ஊர்வசி. 

ஊர்வசி திரைத்துறைக்குள் வந்ததே ஒரு விபத்துதான். ஒரு முறை கூட அல்ல, இரண்டு முறை நிகழ்ந்த இனிய விபத்து. ஒரு மலையாளத் திரைப்படத்திற்காக (கதிர்மண்டபம் -1979) குழந்தை நட்சத்திரத்தை தேடிக் கொண்டிருந்த தயாரிப்பாளர்கள், ஊர்வசியின் அக்காவான கல்பனாவை (சின்ன வீடு படத்தில் நடித்தவர்) பார்க்க வந்தார்கள். ஆனால் அந்தப் படத்தின் ஹீரோயின் ஜெயபாரதியின் சாயல் கல்பனாவை விடவும் ஊர்வசிக்குத்தான் அதிக பொருத்தமாக இருந்தது. இந்தக் காரணத்தைச் சுட்டிக் காட்டிய இயக்குநர் ஊர்வசியை நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டியதால் அவரையே நடிப்பதற்காக அழைத்துச் சென்றார்கள். 

அக்காவிற்கு வந்த வாய்ப்பெல்லாம் தங்கைக்கு….

நடிப்பதில் விருப்பமே இல்லாத சிறுமி ஊர்வசி படப்பிடிப்பில் செய்த ரகளைகளைப் பார்த்து ‘உனக்கு சுட்டுப் போட்டாலும் நடிப்பே வராது’ என்று தயாரிப்பாளர் கோபமடைந்திருக்கிறார். இப்படியாக சாபம் பெற்ற ஊர்வசிதான் பிற்பாடு தேசிய விருது (2006) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற திறமையான நடிகையாக உயர்ந்தார் என்பது வேடிக்கையான வரலாறு. 

குழந்தை நட்சத்திரத்தின் என்ட்ரிதான் இப்படி என்றால் ஊர்வசி ஹீரோயினாக அறிமுகமான ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்திலும் இதே கதைதான் நடந்தது. ஊர்வசியின் இன்னொரு அக்காவான கலாரஞ்சனி நான்கைந்து வெற்றிகரமான மலையாளத் திரைப்படங்களில் நடித்து முடித்திருந்த சமயம் அது.

கலாரஞ்சனி  நடித்ததொரு மலையாளத் திரைப்படத்தைப் பார்த்த பாக்யராஜ், முந்தானை முடிச்சு படத்தில் அவரை ஹீரோயினாக  ஒப்பந்தம் செய்தார். ஆனால் வசனம் சொல்லித்தரும் போது தமிழ் வாசிக்கத் தெரியாமல் தடுமாறிய கலாரஞ்சனிக்கு கூட வந்திருந்த தங்கையான ஊர்வசி உதவி செய்ய, பாக்யராஜின் கண்ணில் பட்டு பிறகு படத்தின் ஹீரோயினாக அறிமுகமானார். அப்போது ஊர்வசியின் வயது 16 மட்டுமே. இப்படியாக அக்காவிற்கு வந்த வாய்ப்புகள் தற்செயல் தேர்வுகளால் ஊர்வசியின் பக்கம் நகர்ந்ததை விதியின் விளையாட்டு என்றுதான் சொல்ல வேண்டும். 

SMS - ஒரு ஜாலியான ரொமான்டிக் நகைச்சுவை

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் (79) | நக்கலான நடிப்பைத் தந்த 'கிள்ளிவளவன்' என்ற பார்த்திபன்!

சில திரைப்படங்கள் ஏன் இப்படி வெறித்தனமாக ஓடி வெற்றி பெற்றது என்கிற காரணத்தை சொல்வது கடினம். ‘சிவா மனசுல சக்தி’ அப்படியொரு படம். இதில் கதை என்று பார்த்தால் பெரிதாக இல்லை. பரஸ்பரம் சீண்டி, வெறுத்துக் கொள்ளும்  காதலர்கள், கடைசியில் இணைவது என்கிற வழக்கமான டெம்ப்ளேட்தான். ஆனால் இளம் தலைமுறையின் துள்ளலான டிரெண்டிங் மனநிலையை பிரதிபலிக்குமாறு  எம்.ராஜேஷ் எழுதியிருந்த திரைக்கதையும் தந்திருந்த டிரீட்மெண்ட்டும்தான் இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் என்று சொல்லலாம். சமீபத்திய ரீரிலீஸின் போது கூட இந்தப் படம் இளைஞர்களால் கொண்டாடப்பட்டது. 

2009 -ல் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படத்தின் போது ஊர்வசிக்கு வயது 40. சினிமாவின் வழக்கப்படி முதலில் ஹீரோயினாக இருந்து பிறகு அக்கா, அம்மா கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த வரிசையில் SMS-ல் அவரது அம்மா கேரக்டரின் நடிப்பு மறக்க முடியாததாக அமைந்திருந்தது. 

ஊர்வசியின் சிறந்த நடிப்பு

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் (80) |அம்மா என்றால் மனோரமா தான்..!

கணவனை இழந்த கல்யாணி தன் மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் ஊர்வசியின் அறிமுகக் காட்சியே குறும்பாக அமைந்திருக்கிறது. ஊரிலிருந்து திரும்பி வீட்டிற்குள் நுழைந்த தன்னை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை என்கிற கோபத்துடன் அமர்ந்திருக்கிறான் மகன் (ஜீவா), “என்னடா.. டிரையின் லேட்டா?” என்கிற கேள்விக்கு பதில் சொல்லாமல் அவன் ‘உர்’ரென்று இருப்பதைப் பார்த்து நாக்கை வெளியில் நீட்டி பழிப்பு காண்பிப்பதில் குழந்தைத்தனம் கலந்த அம்மாவின் கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் ஆரம்பக் காட்சியே சுவாரசியமானது.

பண்பலை வானொலியில் ஒலிப்பரப்பாகும் நேயர் விருப்ப நிகழ்ச்சியில் பேசுவதற்காக தொலைபேசி அழைப்பு இணைக்கப்பட்ட மகிழ்ச்சியில் மகள் அவசரமாக அழைக்க, சமையல் அறையிலிருந்து பரபரப்பாக வரும் ஊர்வசி “நான் விஜியோட அம்மா.. வேலைக்கு போகலை.. வொய்ஃப் ஹவுஸ்..” என்று சந்தோஷப் பதட்டத்தோடு தப்பும் தவறுமாக பேசும் காட்சி சுவாரசியமானது. நேரடி ஒளி/ஒலிபரப்புகளில் தொடர்பு கொள்பவர்கள் மிகையான உற்சாகத்துடன் தடுமாறி தடுமாறி பேசும் பாணியை இந்தக் காட்சியில் ஊர்வசி மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். “டிப்ஸ் ஏதாச்சும் சொல்லணுமா.. என்னை மாதிரி ஸ்லிம்மா இருக்கறதுக்கு ஒண்ணு சொல்றேன்” என்று போனில் அடித்து விடுவது ரகளையான காட்சி. 

“எனக்கு ரெண்டு பசங்க.. பெரியவன் பேரு சிவா.. ப்ளஸ் டூல ரெண்டு தடவ..” என்று அநாவசியமான தகவல்களைக் கூட வாரி வழங்கி கொண்டே இருக்க “யம்மா.. என்னாது இது..?” என்று சிவா சைகையில் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தவுடன் அப்படியே பிளேட்டை மாற்றிப் பேசுவதும் சுவாரசியம். 

எரிச்சலாகும் சிவா போனை கட் செய்ய, தங்கைக்கும் அண்ணனுக்கும் செல்லமான சண்டை ஏற்படுகிறது. “ஊர்ல இருந்து ஒருத்தன் வந்திருக்கேன்.. என்னைக் கண்டுக்காம உங்களுக்கு போன்தான் முக்கியமா?” என்று சிவா அலப்பறை செய்ய, “பத்தியா.. அவன்தான் உனக்கு அண்ணன்.. போ. போய் பசங்களுக்கு டியூஷன் எடுக்கற வேலையைப் பாரு” என்று மகனுக்கு திடீர் ஆதரவு தந்து கட்சி மாறி மகளை துரத்தி விடும்  ஊர்வசியின் நடிப்பு சிறப்பானது. 

மகனை கலாய்க்கும் அம்மா

ஊரிலிருந்து டிரையினில் திரும்பி வரும் போது ‘சக்தி’ என்கிற இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது என்கிற விஷயத்தை “ஐஸ்வர்யா ராயை விட அவ அழகா இருப்பா” என்று  சிவா பில்டப்புடன் சொல்ல “டேய்.. டேய்.. நாங்களும் அந்தப் பொண்ணைப் பார்க்கணும். உன் கூட வரோம்டா..” என்று திருட்டு கெஞ்சு கெஞ்சுவார் ஊர்வசி. “டேய்.. உலகத்துலயே பிகரை கரெக்ட் பண்றதுக்கு ஃபேமிலியைக் கூட்டிட்டு வந்த ஒரே ஆளு நீதான்டா” என்று சந்தானம் கிண்டல் செய்வதற்கு ஏற்பவே இந்தக் காட்சி நடைபெறும். 

ஹீரோயின் செய்யும் குறும்பு காரணமாக, சக்தி என்கிற பெயருள்ள புஷ்டியான அளவில் இருக்கும் ஷகிலாவை இந்தக் குடும்பம் சந்திக்க நேரிடும். இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் சிவா தத்துப் பித்தென்று உளறி சமாளிக்க “என் மவன் பேருதான் சக்தி.. டேய்.. இவங்களைத்தானே பார்க்க வந்தே?” என்று இடையில் புகுந்து ஊர்வசி போட்டுக் கொடுப்பதும்.. ‘அம்மா.. சும்மா இரும்மா.. நீ வேற குட்டையைக் குழப்பாத’ என்று சிவா தவிப்பதும் ரகளையான நகைச்சுவை. 

இந்தக் குழப்பம் காரணமாக, சந்தானமும் சிவாவின் தங்கையும்  விழுந்து விழுந்து சிரிக்க சிவா இன்னமும் காண்டாவான். அப்போது சிரிப்பை அடக்க முடியாமல்,  மகனுக்கு ஆதரவாக இருப்பது போல் வாயை மூடிய படி ஊர்வசி நடிக்கும் காட்சி சுவாரசியமானது. 

குணச்சித்திர நடிப்பிலும் கலக்கிய ஊர்வசி

வீடு புகுந்து தன்னை வெறுப்பேற்றிய சிவாவை பழிவாங்குவதற்காக ‘சிவாவின் பிரண்டு’ என்கிற உரிமையுடன் அவனது வீட்டிற்குள் பதிலுக்குப் புகுந்து சிவாவின் கெட்ட பழக்கங்களை சக்தி போட்டுக் கொடுப்பதும் ‘தன் மகனை திருத்த ஒருத்தி வந்து வி்ட்டாளே’ என்று ஊர்வசி மகிழ்ச்சியில் ஆழ்வதும் இன்னொரு சுவாரசியமான காட்சி. 

ஊர்வசி ஹீரோயினாக அறிமுகமான ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தின் ஒரு காட்சியையும் இந்தப் படத்தில் செருகியிருப்பார் இயக்குநர்.  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அந்த சீனை  பார்த்து விட்டு ‘எனக்கு மிமிக்ரி நல்லா வரும். பாக்யராஜ் மாதிரி பேசறேன்..பாருங்க” என்று சக்தி நடித்துக் காட்ட அதைக் கேட்டு ஊர்வசி வியக்கும் காட்சி சிறப்பானது. அடுத்ததாக, சிவாவைப் போல் சக்தி பேசிக் காட்டிக் கொண்டிருக்க, அதே சமயத்தில் வீட்டிற்குள் சிவா வந்து விட, சக்தி விளையாட்டாக பேசிக் காட்டிய அதே வசனத்தை, சிவா சீரியஸாக சொல்ல, சிரிப்பை அடக்க முடியாமல் ஊர்வசி தவிப்பது ஜாலியான காட்சி. 

நகைச்சுவை நடிகர்கள் மிக எளிதாக குணச்சித்திர நடிப்பிற்கு கூடு பாய முடியும் என்பதற்கு ஊர்வசியும் விதிவிலக்கல்ல. இதே திரைப்படத்தில் அதற்கான உதாரணக் காட்சியும் இருக்கிறது. 

தன் காதலியிடம் நிகழ்நத சண்டை காரணமாக வெறுப்புடன் வீட்டிற்குள் நுழையும் சிவாவிடம் செலவிற்கு பணம் கேட்டு அதற்கான காரணங்களை அடுக்குவார் ஊர்வசி. அந்தச் சமயத்தில் சிவாவின் தங்கை சொல்லும் விளையாட்டான பொய் காரணமாக அவள் மீது பாய்ந்து கடுமையாக அடிப்பான் சிவா. 

அதைப் பார்த்து பதறிப் போய் தடுக்கும் ஊர்வசி “டேய்.. அப்பா இல்லாத பொண்ணை இப்படியா கைநீட்டி அடிப்பாங்க?” என்று ஆட்சேபிக்க “யம்மா. கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா.. எப்பப் பார்த்தாலும் நொய்.. நொய்ன்னு.. இப்படி பேசிப் பேசித்தான் எங்க அப்பனை சாகடிச்சே..  இப்ப என்னையும் சாகடிச்சிடுவே போலிருக்கே.. நானாவது கொஞ்ச நாள் நிம்மதியா வாழறனே..” என்று கோபத்தில் நெருப்பாக வார்த்தைகளை வீசி விட்டு செல்லும் மகனைப் பார்த்து திகைத்து நின்று விடுவார் ஊர்வசி. அதுவரை விளையாட்டும் கும்மாளமுமாக இருந்த ஊர்வசி மறைந்து வேறு மாதிரியான எக்ஸ்பிரஷனில் அசர வைக்கும் நடிப்பைத் தந்திருப்பார். 

மன்னிப்பு கேட்கும் மகன் - மனமுருகும் அம்மா

கோபம் தணிந்து வரும் மகன் “அம்மா.. ஏதோ கோபத்துல பேசிட்டேன். மன்னிச்சடும்மா.. பேசாம இருக்காதம்மா” என்று உருக்கத்துடன் கெஞ்ச “நான் பேசினாதான் நீ செத்துப் போயிடுவேன்னு சொல்றியேடா” என்று கண்ணீர் விடும் காட்சி நெகிழ்வை ஏற்படுத்துவது. 

மறுநாள் விடிந்தவுடன், மறைந்த போன தனது கணவரின் புகைப்படத்தில் கண்விழிப்பார் ஊர்வசி. அதை பிரேம் போட்டு ஹாலில் மாட்ட வேண்டும் என்று மகனிடம் எத்தனையோ முறை சொல்லியும் நிறைவேறாத விஷயமாக அது இருந்தது. அந்த விஷயம் நிறைவேறிய மகிழ்ச்சியில் மகனைத் தேடி மாடிக்கு செல்லும் ஊர்வசி, தண்ணீர் டாங்க் பகுதியில் மகன் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து ‘ஏண்டா.. இங்க படுத்திருக்கே?” என்று பாசத்துடன் எழுப்புவதும் “அம்மா.. நேத்து நைட்டு தெரியாம பேசிட்டேன். இனிமே நடக்காது” என்று மகன் மன்னிப்பு கேட்பதும் “அதை விடுடா.. அப்பவே நான் மறந்துட்டேன்” என்று புகைப்படம் மாட்டிய விஷயத்திற்காக மகனை செல்லம் கொஞ்சுவதும் சுவாரசியமான காட்சி. 

“ஒரு மேட்டர் நடந்துடுச்சு.. என்ன மேட்டர் அது,?”

இறுதிக்காட்சி. சிவாவிற்கும் சக்திக்குமான ஊடலும் மோதலும் உச்சிக்குச் சென்று விடுகிறது. அவளைச் சந்திப்பதற்காக மறுபடியும் தன் குடும்பத்தை கூடவே அழைத்துச் செல்கிறான் சக்தி. “என் மேல தப்பே இல்லம்மா” என்று சக்தி அழுது சாதிப்பதும் “அதானே.. என் பையன் தங்கமாச்சே?” என்று ஊர்வசி பெருமை கொள்வதும் ரசிக்க வைக்கும் காட்சி. 

சக்தியின் வீட்டிற்குள் சென்ற பிறகு “நான் காஃபி டீலாம் குடிக்க மாட்டேன். காலைல எழுந்து பழைய சாதத்துல மேல வெங்காயத்தைப் போட்டு பச்சை மிளகாய்.. என்று அநாவசியமான விஷயங்களை அடுக்கும் வெள்ளந்தியான ஊர்வசியின் நடிப்பு சிறப்பானது. மணமகனின் அம்மா என்கிற  பந்தாவுடன் “பொள்ளாச்சி ஜமீன்ல இருந்து கூட பொண்ணு கேட்டு வந்தாங்க” என்று அடித்து விடும் ஊர்வசி, மகனின் முறைப்பைப் பார்த்தவுடன் அடக்கி வாசிப்பது நல்ல நகைச்சுவை. 

தன்னை நல்லவனாக காட்டிக் கொள்வதற்காக அழுது புலம்பி ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டு சீன் போடுகிறான் சக்தி. “என்னப்பா.. இது.. குடும்பமே அழுகாச்சி குடும்பமா இருக்கு?” என்று சக்தியின் தந்தை கோபப்பட “எதுக்கு எங்க குடும்பத்தை இழுக்கறீங்க. நாங்க என்ன வீடு வீடா போய் அழுதுட்டா வரோம்?” என்று ஊர்வசி தரும் ஜாலியான கவுன்ட்டர் பட்டாசு ரகம். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | வட சென்னையிலிருந்து ‘ராஜன்’

“எனக்கும் உங்க பொண்ணுக்கும் மேட்டர் நடந்துடுச்சு” என்று பொய்யான அழுகைக்கு நடுவே சக்தி சொல்ல, அந்த ‘மேட்டர்’ என்பதின் உட்பொருள் அறியாமல் “ஏண்டா சக்தி.. எவ்ள பெரிய மேட்டர்லாம் நீ அசால்ட்டா டீல் பண்ணியிருக்கே.. இது சின்ன மேட்டர்தானே.. என்னன்னு சொல்லிடுடா” என்று ஊர்வசி புரியாமல் பேசுவதும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காட்சி. 

அதேதான். இத்தனை ஜாலியானதொரு அம்மாவை தமிழ் சினிமா அதுவரை கண்டதில்லை என்று சொல்லலாம். மகனையே பங்கமாக கலாய்க்கும் ஜாலியான அம்மா பாத்திரத்தில்’ சிவா மனசுல சக்தி’ திரைப்படத்தில் ஊர்வசி கலக்கியிருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com