ஸ்ரீதேவி பற்றி ஏ டூ இசட் டாகுமென்டரி: 5 பாகமாக உருவாகிறது!
இந்திய சினிமாவில் ஐம்பது வருடம் கோலோச்சிக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் பொருட்டு டாகுமென்டரி தொடர் உருவாக்கப்படுகிறது.
நடிகை ஸ்ரீதேவி, 4 வயது குழந்தையாக இருக்கும்போதே சினிமாவில் அறிமுகமானவர். எம்.ஏ.திருமுகம் இயக்கிய ‘துணைவன்’ படத்தில் அறிமுகமான அவர், தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்திப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பிறகு
ஹீரோயினாக நடித்தார். சிவாஜி, கமல், ரஜினி, சிரஞ்சீவி உட்பட தென்னிந்திய மொழிகளில் கலக்கிய அவர், பின்னர் இந்திக்குச் சென்றார். அங்கும் முன்னணி நடிகையாக இருந்த அவர், தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு
இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. மூத்த மகள் ஜான்வி, இந்தி படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இப்போது பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீதேவியின் ரசிகர் மன்றத்தினர் இணைந்து அவர் பற்றி டாகுமென்டரி தொடர் ஒன்றைத் தயாரிக்க உள்ளனர். ஐந்து பாகமாக உருவாக்கப்பட உள்ள இதில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால்,
அம்பரீஷ் உட்பட முன்னணி ஹீரோ, ஹீரோயின்கள், ஸ்ரீதேவி பற்றி தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள்.
மேலும் மூத்த இயக்குனர்கள், ஸ்ரீதேவியுடன் பணியாற்றிய டெக்னீஷியன்கள் மற்றும் குடும்பத்தினரின் பேட்டியும் இதில் இடம்பெறுகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த டாகுமென்டரிக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஒப்புதல் அளித்துள்ளார்.

