“பாதுகாப்புடன் வேலையும் நடக்கணும்ல”-புகைப்படங்களை வெளியிட்ட அமிதாப் பச்சன்
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் சிகிச்சைக்குப் பின்பு வீடு திரும்பினார் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். விரைவில் ‘கோன் பனேகா கரோர்பதி’ சீஸன் 12 ஷூட்டிங்கில் கலந்துகொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். இதனால் அவருடைய உடல்நலனில் அக்கறை கொண்ட ரசிகர்கள் கவலைகொண்டனர். தற்போது ஷூட்டிங்கில் இருக்கும் அமிதாப், படப்பிடிப்பின்போது எடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் ‘’பாதுகாப்பாக இருங்கள், முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்... அதேநேரத்தில் வேலைநடப்பது அவசியம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செட்டில் அனைவரும் மாஸ்க் அணிந்து மற்றும் சகல பாதுகாப்புகளுடனும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ரசிகர்களின் அக்கறை பற்றி, ’’நிறையப்பேர் உங்களுடைய அன்பையும், அக்கறையையும் வெளிப்படுத்தி உள்ளீர்கள். நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைப்பதைப் புரிந்துகொண்டேன். எவ்வளவு பாதுகாப்பாக பணிகள் நடக்கிறது பாருங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
‘’ஆராய்ச்சிக்கூடத்தில் வேலைபார்ப்பது போன்று உள்ளது. இந்த சூழ்நிலையை யாரும் எதிர்பார்க்கவில்லை. வேலை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும், யாரும் மற்றவர்களுடன் பேசுவதில்லை’’ என்று முன்பே தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், “தெரிந்த முகங்கள்கூட இப்போது தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டன. சரியான இடத்தில் சரியான ஆட்களுடன்தான் இருக்கிறோமா என்ற பயம் எழுகிறது. ஆனால் பாதுகாப்பும், முன்னெச்சரிக்கையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் நன்றாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.