“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
கேரளாவைச் சேர்ந்த பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாகவும் அதன் காரணமாக 32,000 பெண்கள் கேரளாவிலிருந்து மாயமாகி உள்ளதாகவும் கூறப்படும் கதைக் களத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ எனும் திரைப்படம் இந்தியில் இன்று வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளா - தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அதன் நிர்வாகிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தன.
தமிழ்நாட்டில் இப்படத்தை வெளியிட்டால் பிரச்னைகள் வரலாம் என உளவுத்துறை எச்சரித்தது. இப்படியாக பலத்த எதிர்ப்புக்கிடையேவும் சர்ச்சைக்கிடையேவும் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்படமானது இன்று வெளியானது. இதில் தலைநகர் சென்னையில் 10 இடங்களில் இந்த திரைப்படம் வெளியானது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
அதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்குக்கு வரும் பொதுமக்களை பலத்த சோதனைக்கு பிறகு திரையரங்குக்குள் அனுமதித்தனர் காவல்துறையினர்.
குறிப்பாக படம் பார்க்க வரும் நபர்களின் விவரங்கள் மற்றும் முகவரிகளை சேகரித்த பின்பு உள்ளே அனுமதிக்கின்றனர். இதேபோல சென்னையில் ஆங்காங்கே இருக்கக்கூடிய பிற திரையரங்குகளிலும் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.