"ஐஸ்வர்யா ராய்க்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்” - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அபிஷேக் பச்சன்!
நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பாலிவுட் நட்சத்திர தம்பதிகளாக வலம்வரும் இவர்களுக்கு ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார். இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் பற்றிய செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் இடம்பிடித்து வைரலாகி வருகின்றன. இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தனியாக தோன்றினார். தொடர்ந்து வெளிநாட்டு சினிமா விருதுகள் வழங்கும் நிகழ்விலும் ஐஸ்வர்யா ராய் தனியாகவே தோன்றினார். தொடர்ந்து, ஐஸ்வர்யா ராயின் குடும்பத்தில் ஒருவருக்கு பிறந்தநாள் விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதில் ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா, ஐஸ்வர்யா ராயின் தாயார் பிருந்தா ராய் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சிலர் கலந்துகொண்டனர். இதிலும் ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர்களுடைய பிரிவு பற்றிய கேள்விகளுக்கு மேலும் வழிவகுத்தது. என்றாலும், அவர்கள் இருவரும் இதுகுறித்து எதுவும் வாய் திறக்கவில்லை.
இந்த நிலையில், நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பில் இந்தியில் ’I want to talk’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் புரொமோஷனுகாக கலந்துகொண்ட அபிஷேக் பச்சனிடம், அவர் வாழ்க்கையில் நடக்கும் நெகட்டிவ் செய்திகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “பிள்ளைகளுக்கு அன்னையர் செய்வதை யாராலும் ஈடுகட்ட முடியாது. தந்தையர்களோ அனைத்தையும் அமைதியாகச் செய்வார்கள். அன்பை வெளிக்காட்ட தெரியாததுதான் ஆண்களின் மிகப்பெரிய பிரச்னை.
நான் பிறந்தவுடன் என் அம்மா நடிப்பதை நிறுத்திவிட்டார். ஏனென்றால், அவர் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட விரும்பினார். இதனால், அப்பா இல்லாத வெற்றிடத்தை நாங்கள் ஒருபோதும் உணரவில்லை. இப்போது, எங்களது மகள் ஆராத்யாவை ஐஸ்வர்யா ராய் பார்த்துக்கொள்வார் என்ற தைரியத்தில்தான் நான் வெளியில் சென்று படங்களில் நடிக்க முடிகிறது. எனவே, நான் ஐஸ்வர்யா ராய்க்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அவர்களது வதந்தி பற்றிய செய்திகளுக்கு முடிவு கிடைத்திருப்பதாக பயனர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.