ஜனநாதன் வேட்புமனு நிராகரிப்பு: இயக்குனர் சங்க தேர்தலில் இருந்து விலகியது அமீர் அணி!

ஜனநாதன் வேட்புமனு நிராகரிப்பு: இயக்குனர் சங்க தேர்தலில் இருந்து விலகியது அமீர் அணி!
ஜனநாதன் வேட்புமனு நிராகரிப்பு: இயக்குனர் சங்க தேர்தலில் இருந்து விலகியது அமீர் அணி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட எஸ்.பி.ஜனநாதனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், அமீர் தலைமையிலான அணி தேர்தலில் இருந்து விலகியுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். தற்போதைய நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு, இயக்குனர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், அமீர், எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தலைவராக போட்டியிட, அமீர் முன் மொழிந்துள்ளார். தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஒருவர் மற்றொருவருக்கு முன் மொழிய கூடாது என்பது விதி. இதையடுத்து இருவரது வேட்புமனுக்களையும் தேர்தல் அதிகாரி, செந்தில்நாதன் நிராகரித்தார். இதனால் இயக்குனர் சங்கத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இயக்குனர் சங்கத் தேர்தல் நேர்மையாக நடைபெறாது என்பதால், போட்டியிடுவதில் இருந்து விலகிகொள்வதாகவும் அமீர் தலைமையிலான அணி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமீர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது:

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் 2019ம் ஆண்டு தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், இணைச்செயலாளர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு முறையே எஸ்.பி ஜனநாதன், அமீர், கரு.பழனியப்பன், 
வெற்றிமாறன், சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல், ’தயா’ செந்தில்குமார், ஜெகன்னாத், அஸ்லம், நாகேந்திரன், ஜெகதீஷன், பாலமுரளிதரன், விருமாண்டி, திருமுருகன் உள்ளிட்ட இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் அணி போட்டியிட முடிவு செய்து மனுதாக்கல் செய்திருந்தோம்.

நேற்று நடந்த இறுதி வேட்புமனு பரிசீலனையில் ஜனநாதனின் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை சட்ட விதிகளுக்கு புறம்பாக, திட்டமிட்டு தேர்தல் அதிகாரி சில பொய்யான காரணங்களைக் காட்டி நிராகரித்துவிட்டார். அதற்கான காரணத்தை கேட்டபோது, ஜனநாதன் கோரிக்கை நியாயமானதுதான், இருந்தாலும் அவரது வேட்புமனுவை நிராகரிக்கிறேன் என்று கடிதம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் உங்களுக்குத் தேவை என்றால் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று வாய்மொழியாகவும் கூறிவிட்டார். 

எனவே, தேர்தல் அதிகாரி இப்போது பதவியில் இருக்கும் நிர்வாகத்தினருடன் இணைந்து ஜனநாதனின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை நெறிக்குப் புறம்பாக நிராகரித்தது போலவே, நடைபெறக்கூடிய தேர்தலையும் நெறியற்ற முறையில் நேர்மை இல்லாமல் நடத்த திட்டமிட்டுள்ளார் என்பதை அறிந்து எங்கள் அணியினர் ஆலோசித்தோம். 

ஏற்கனவே நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாகவும் பதவிக்கு போட்டியிடும் அரசியல் நபர்களுக்கு துணையாகவும் இருக்கும் அதிகாரியைக் கொண்டு நடைபெறப்போகும் இந்த தேர்தலில் பங்கு பெறுவது என்பது சங்கத்திற்கும் திரைத்துறைக் கும் எந்த நன்மையும் பயக்காது என்கிற காரணத்தாலும், தலைவர் பதவி வேட்பாளருக்கு நடைபெற்ற அநீதிக்கு ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், அமீர் தலைமையிலான இயக்குனர்கள் மற்றும் இணை துணை உதவி இயக்கு நர்கள் அனைவருமாகிய நாங்கள் அனைத்து பொறுப்புகளின் போட்டியிலிருந்தும் விலகுவது என்று முடி வெடுத்து தேர்தல் அதிகாரியிடம் விலகல் கடிதம் கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com