இளையராஜா இசையில் ’மாடர்ன் லவ் - சென்னை’ சீரிஸ்.. மே 18ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியீடு!

‘மாடர்ன் லவ் - சென்னை’ தொடர், மே 18 அன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
‘மாடர்ன் லவ் - சென்னை
‘மாடர்ன் லவ் - சென்னைprime video IN twitter page

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற வெப் தொடர் ‘மாடர்ன் லவ்’. இத்தொடரின் இந்திய பதிப்பான ‘மாடர்ன் லவ் - மும்பை’, ’மாடர்ன் லவ் - ஹைதராபாத்’ ஆகியனவும் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிலையில், மாடர்ன் லவ் சீரிஸின் மூன்றாவது இந்திய அத்தியாயமான ’மாடர்ன் லவ் - சென்னை’ சீரிஸ், வரும் மே 18ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.

இத்தொடரில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்‌ஷய் சுந்தர், தியாகராஜன் குமாரராஜா ஆகிய ஆறு பேரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, முதல் அத்தியாயத்தில் இயக்குநர் ராஜு முருகன் இயக்கிய ‘லாலாகுண்டா பொம்மைகள்’ இடம்பெற்றுள்ளது. இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதில் ஸ்ரீ கௌரி ப்ரியா, வாசுதேவன் முரளி, மற்றும் வசுந்தரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இரண்டாம் அத்தியாயத்தில், இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘இமைகள்’ இடம்பெற்றுள்ளது. இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அசோக் செல்வன், மற்றும் டி.ஜே.பானு ஆகியோர் நடித்துள்ளனர்.

மூன்றாவது அத்தியாயத்தில் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கிய ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற இமோஜி’ இடம்பெற்றுள்ளது. இந்த அத்தியாயத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் ரிதுவர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ் மற்றும் அனிருத் கனகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நான்காவது அத்தியாயத்தில், அக்‌ஷய் சுந்தர் இயக்கியுள்ள ‘மார்கழி’ இடம்பெற்றுள்ளது. இதற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சஞ்சுளா சாரதி, சூ கோய் ஷெங் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா தயாள் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஐந்தாவது அத்தியாயத்தில் இயக்குநர் பாரதிராஜா இயக்கியிருக்கும் ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ இடம்பெற்றுள்ளது. இதற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த அத்தியாயத்தில் கிஷோர், ரம்யா நம்பீசன் மற்றும் விஜயலக்‌ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆறாவது அத்தியாயத்தில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள ‘நினைவோ ஒரு பறவை’ இடம்பெற்றுள்ளது. இதற்கும் இளையராஜாவே இசையமைத்துள்ளார். இதில் வாமிகா மற்றும் பீபி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அமேசான் ப்ரைம் வீடியோவின் இந்திய ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித், ”மாடர்ன் லவ் மும்பை மற்றும் மாடர்ன் லவ் ஹைதராபாத் உள்ளிட்டவை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மாடர்ன் லவ் சென்னையின் இந்திய பதிப்பை கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். உலகளவில் கவரக்கூடிய உள்ளூரில் வேரூன்றிய கதைகளைக் கொண்டு வருவதற்கு ப்ரைம் வீடியோவில், நாங்கள் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com