“சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை சந்தித்திருக்கிறேன்” - நடிகை அமலாபால்

“சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை சந்தித்திருக்கிறேன்” - நடிகை அமலாபால்

“சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை சந்தித்திருக்கிறேன்” - நடிகை அமலாபால்
Published on

இயக்குனர் சுசி கணேசன் ‘திருட்டுப் பயலே-2’ படப்பிடிப்பின் போது தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக நடிகை அமலாபால் குற்றம்சாட்டியுள்ளார்.

மீ டூ ஹேஸ்டேக் மூலம் நாடு முழுவதும் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் ரீதியான பிரச்னைகளை பெண்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டரில் மீடூ இயக்கம் நடைபெற்று வருகிறது. 

இதில் இந்தியாவின் பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பேசு பொருளாக மாறியது. வைரமுத்து விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நேரத்தில், பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார் லீனா மணிமேகலை. 

அவரின் குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமென சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார் அளித்தார். 

மேலும் தன் மீது பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், ஒரு ரூபாய் இழப்பீடு கோரி சுசி கணேசன் வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில் சுசி கணேசன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் நடிகை அமலாபால். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில்
''இயக்குநர் சுசி கணேசன் மீதான லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தரத் தெரியாத ஒரு மனிதரிடம், அந்தப் பெண் என்ன பாடுபட்டு இருப்பார் என்பது எனக்குப் புரிகிறது. சுசி கணேசன் இயக்கிய ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் நாயகியாக நான் இருந்தாலும், அவரின் இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை எனப் பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்திருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுபட்டிருப்பார் என்பதை நான் அறிவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தக் கொடுமையை, சமூக வலைத்தளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லியிருப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இன்றைய பொருளாதார நிலையும், பெருகிவரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும், பெண்களை எளிய இரையாக்கி விடுகிறது. அனைத்துத் தொழில்களிலும் துறைகளிலும் இந்தக் கொடுமை நடந்து வருகிறது. தங்களது மனைவியையும் மகள்களையும் போற்றிக் காப்பாற்றும் இதே ஆண் சமுதாயம், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையைச் செலுத்துவது துரதிஷ்டவசமானது. பெண்களுக்குத் தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களை சட்ட ரீதியாக அமல்படுத்த வேண்டும். அவ்விதமான கட்டுப்பாடுகளே பெண்களைப் போகப்பொருளாகச் சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாகும்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமலா பாலுக்கு பதில் அளித்த லீனா மணிமேகலை, ''நான் சுசி கணேசனுடன் இணைந்து பணியாற்றவில்லை. 2005ம் ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்கும் போதே அவரை சந்தித்தேன். நீங்கள் எனக்கு தந்த ஆதரவுக்குரலுக்கு நன்றி. உங்களுக்கு நடந்த செயலுக்காக நான் வருந்துகிறேன். இந்தப் போராட்டத்தில் நாம் இணைந்தே பணியாற்றுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com