
’மெர்சல்’ படம் போல ’நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திலும் சமூக அக்கறை கொண்ட செய்தி இருக்கிறது என்று இயக்குனர் சுசீந்திரன் சொன்னார்.
சந்திப் கிஷன், விக்ராந்த், மெஹரின் நடித்துள்ள படம், 'நெஞ்சில் துணிவிருந்தால்'. படத்தை இயக்கியுள்ள சுசீந்திரன் கூறும்போது, ’இந்தப் படம் நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது. எனது எல்லா படத்திலும் இருக்கும் சூரி, இந்த படத்திலும் இருக்கிறார். நானும் சூரியும் இணையும் ஏழாவது படம் இது. இந்த படத்தில் சூரியின் பங்கு அதிகமாக இருக்கும். என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும் நபர்களில் ஒருவர் சூரி. ’வெண்ணிலா கபடி குழு’வுக்கு பின் லட்சுமணுடன் மீண்டும் இணைந்துள்ளேன். எனது எல்லா படங்களிலும் சமூக நீதி இருக்கும். ’ராஜபாட்டை’ தோல்வி படமாக இருந்தாலும் அதில் சமூக அக்கறை இருந்தது. ’மெர்சல்’ போன்று இந்தப் படத்திலும் அழுத்தமான சமூக அக்கறை கொண்ட செய்தி உள்ளது. இந்த படத்தில் விக்ராந்த் சிறப்பாக நடித்துள்ளார். புது முகங்களை கொண்டு படம் எடுப்பது தானாக அமைகின்றது. பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் படம் வெற்றியடையும் போது அந்த வெற்றி நடிகரை மட்டுமே சாரும். புது முகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடையும் போது அந்த வெற்றி படத்தின் இயக்குநரை சேரும்.
'நெஞ்சில் துணிவிருந்தால்' நவம்பர் 10 வெளியாகிறது’ என்றார்.