ஷங்கர் இயக்குநர் அல்ல எனவும் அவர் ஒரு விஞ்ஞானி எனவும் ‘2.0’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் அக்ஷய் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் ‘2.0’. இந்தப் படத்தின் டிரெய்லர் காட்சி சென்னையில் இன்று திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர், நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், எமி ஜாக்ஷன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பிறகு நடிகர் அக்ஷய் குமார் இயக்குநர் ஷங்கருடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஷங்கர் இயக்குநர் அல்ல எனவும் அவர் ஒரு விஞ்ஞானி எனவும் புகழாரம் சூட்டினார்.
இந்தப் படத்தின் மூலம் பல சவாலான விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும், மேக்-அப் போடுவதற்கு 3 மணி நேரமும் அதை கலைப்பதற்கு ஒரு மணி நேரமும் தேவைப்பட்டதாக குறிப்பிட்டார்.
மேலும், என்னை திரையில் பார்த்து என்னாலேயே நம்ப முடியவில்லை எனவும் பட்ட கஷ்டங்களுக்கு சிறந்த பலன் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக இயக்குநர் ஷங்கருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இந்த வாய்ப்புக்காக ஷங்கருக்கு நன்றி மட்டும் தெரிவித்தால் போதாது எனவும் அக்ஷய் குமார் தெரிவித்தார்.