வரும் 21-ல் தொடங்குகிறது இந்தி ’காஞ்சனா’: அக்ஷய், அமிதாப்பை இயக்குகிறார் லாரன்ஸ்!
தமிழில் ஹிட்டான ’காஞ்சனா’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதை ராகவா லாரன்ஸ் இயக்குகிறார்.
ராகவா லாரன்ஸ் தற்போது ’காஞ்சனா’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கியுள்ளார். இது ’முனி’யின் நான்காம் பாகம். இதில் லாரன்ஸூடன் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி, கோவை சரளா, நெடுமுடி வேணு உட்பட பலர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் 19 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.
இதையடுத்து ராகவா லாரன்ஸ், தனது ’காஞ்சனா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். ’காஞ்சனா’வில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழில் மெகா ஹிட்டான இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் அமிதாப் பச்சன், அக்ஷய்குமார் நடிக்கின்றனர். ராகவா லாரன்ஸ் இயக்குகிறார்.
(கியாரா அத்வானி)
இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 21 ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்தப் படத்துக்கு லட்சுமி என்று டைட்டில் வைத்துள்ளனர். அக்ஷய்குமார் ஜோடியாக கியரா அத்வானி நடிக்கிறார்.
இதற்கிடையே காஞ்சனா இந்தி ரீமேக்கில் தான் நடிக்கவில்லை என்று நடிகை சோபிதா துலிபலா தெரிவித்துள்ளார். ’நான் நடிக்கப் போவதாகக் கூறி எனக்கு வாழ்த்துச் செய்திகள் வந்தன. ஆனால், என்னை யாரும் அந்தப் படத்துக்கு அழைக்கவில்லை. தான் அதில் நடிக்கவில்லை’’ என்று அவர் கூறியுள்ளார்.