சினிமாவில் எனது அப்பா கமலும் அம்மா சரிகாவும் நடித்தப் படங்களின் ரொமான்ஸ் காட்சிகளைப் பார்க்கும்போதெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுவிடுவேன் என்று நடிகையும் கமல்ஹாசனின் இளைய மகளுமான அக்ஷரா ஹாசன் சொன்னார்.
அவர் மேலும் கூறும்போது, ‘அப்பா நடித்த நாயகன், அவ்வை சண்முகி படங்களின் ரொமான்ஸ் காட்சிகள் எனக்கு பிடிக்கும். அம்மா சரிகா நடிப்பில் ’ராஜ் திலக்’படக் காட்சிகள் பிடிக்கும். இந்தப்படத்தில் நடித்தபோதுதான் எனது அம்மாவும் அப்பாவும் காதலில் விழுந்தார்கள். இந்தப் படத்தின் காதல் காட்சியைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நான் ஷமிதாப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானேன். எனது நடிப்பில் பெற்றோருக்குத் திருப்திதான். சரியான வழியில்தான் சென்றுகொண்டிருக்கிறேன் என்பதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி. சில நேரங்களில் எனது காட்சியை பார்த்துவிட்டு, அப்படி ஏன் செய்தாய், இப்படி செய்திருக்கலாமே என்று சொல்வார்கள். சில நேரங்களில் அதை ஏற்பேன். சில நேரங்களில் மாட்டேன் ’ என்றார்.
சினிமாவில் அசிஸ்டென்ட் இயக்குனராக வாழ்க்கையை துவக்கியவர் அக்ஷரா. அதுபற்றி கேட்டபோது, ’கமல்ஹாசனின் மகள் என்று சொல்லாமல், இந்திப் பட இயக்குனர் ராகுல் தோலஹியாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். நான் யார் மகள் என்று தெரிந்தால் மற்றவர்கள் என்னைப் பார்க்கும் பார்வை மாறும் என்பதால் அப்படிச்செய்தேன்’ என்றார்.
இப்போது இந்தியில் ’லாலி கி சாதி மேய் லாடூ தீவானா’, அஜீத்தின் ’விவேகம்’ படங்களில் நடித்துவருகிறார் அக்ஷரா.