‘பேஸ்புக்கில் நேரலை செய்ததால்தான் பிரச்னை’ : ‘அஜித் செல்ஃபி சர்ச்சை’ - ஓர் பார்வை!

‘பேஸ்புக்கில் நேரலை செய்ததால்தான் பிரச்னை’ : ‘அஜித் செல்ஃபி சர்ச்சை’ - ஓர் பார்வை!
‘பேஸ்புக்கில் நேரலை செய்ததால்தான் பிரச்னை’ : ‘அஜித் செல்ஃபி சர்ச்சை’ - ஓர் பார்வை!

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடந்த நிலையில் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் வந்த அஜித்திடம் ரசிகர் ஒருவர் புகைபடம் எடுக்க முயற்சித்தார். அப்போது கோபமடைந்த அஜித், அந்த ரசிகரின் போனை பிடுங்கி அந்த ரசிகரை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினார். சிறிது நேரம் கழித்து அந்த ரசிகரை எச்சரித்த அவர் போனை அவரிடம்  ஒப்படைத்தார். இறுதியாக தான் கண்டிப்புடன் நடந்தமைக்கு ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்தார்.

அதே போல யாரும் கணித்திராத வகையில் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து சைக்கிளிலேயே வாக்களிக்க சென்ற ரசிகரிகளின் கூட்ட நெரிசலில் சிக்கினார். அதன் பின்னர் ஒரு வழியாக வாக்களித்த விஜய், அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபடி வீட்டிற்குச் சென்றார். அப்போதும் ஏராளமான ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் செல்ஃபி எடுத்தவாறே அவரை வீடு வரை பின் தொடர்ந்தனர். இந்த இரண்டு சம்பவங்களிலும் கவனிக்க வேண்டிய விஷயம் பொது இடங்களில் ரசிகர்கள் பிரபலங்களிடம் நடந்து கொண்ட விதம்.

பிரபலங்கள் தனது ஜனநாயக கடமையை ஆற்றும் போது ரசிகர்கள் இவ்வாறு நடந்துகொண்டது ஒரு பக்கம் முகம் சுழிக்க வைத்தாலும், மற்றொரு பக்கம் அந்த பிரபலம் மீது ரசிகர் வைத்திருக்கும் பேரன்பும், இங்கு பார்க்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

ஆகையால் இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து, உண்மையில் பிரபலங்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பது என்ன, இது போன்ற சம்பவங்களை பிரபலங்கள் எவ்வாறு பார்க்கின்றனர் என்பது தொடர்பான சந்தேகங்களை மூத்த மக்கள் தொடர்பாளர்களிடம் முன் வைத்தோம்.

மூத்த சினிமா மக்கள் தொடர்பாளர் ஒருவர் கூறும் போதும், “ரசிகர்கள் பிரபலங்களின் வாழ்கையில் ஒரு அங்கம். ஆதலால் அவர்களிடம் வரும் அன்பு எந்தவகையில் வந்தாலும் அதனை பிரபலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் சொல்லவேண்டும் என்றால், அதற்கேற்றபடி தங்களை அவர்கள் தகவமைத்துக்கொள்ள வேண்டும். காரணம், தான் நடித்த படத்தின் முதல் காட்சிக்கு ரசிகர் வரவேண்டும் என்று எண்ணும் பிரபலம் இதனையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதே சமயம் ரசிகர்களும் இடமறிந்து பிரலங்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.”என்றார்

பேஸ்புக்கில் நேரலை செய்த ரசிகர் - உண்மையில் நடந்தது என்ன? 

மேலும் பேசிய அவர், “இன்று அஜித்திற்கு நடந்த நிகழ்வை பொறுத்தவரை, அஜித்தை பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த ரசிகர் வேலூரில் இருந்து இரு சக்கரவாகனத்தில் வந்திருந்தார். அவர் அங்கு அஜித்திடம் செல்ஃபி எடுக்க முயலவில்லை. பேஸ்புக்கில் நேரலை செய்து கொண்டிருந்தார். அவர் செல்ஃபி எடுத்திருந்தால் இந்தப்பிரச்னை வந்திருக்காது.

முன்பெல்லாம் ரசிகர்கள் பிரபலங்களிடம் ஆட்டோகிராப் வாங்குபவர். ஆனால் இன்று செல்ஃபி எடுக்கிறனர். இதனால் பிரபலங்களுக்கும் ரசிகருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்துள்ளது. இது எங்கே சிக்கலை ஏற்படுத்தும் என்றால், பிரபலம் நடந்துக்கொண்டிருக்கும் போது, இருவர் செல்ஃபி எடுக்க முன்னே நின்றால் பிரபலம் தடுக்கப்படுவார். அதனால் பின்னால் வருபவர்கள் பிரபலத்தின் மேல் வந்து விழுவர். இதனால் பிரபலம் காயப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆதலால் இது போன்ற சூழ்நிலைகளை ரசிகர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.” என்றார்.

மக்கள் தொடர்பாளர் ஜான்சன் கூறும் போது, “ உண்மையில் தன்னை ரசிகர்கள் பார்க்க அதிகமாக வரவேண்டும் என்பதுதான் பிரபங்களின் உள்ளார்ந்த எண்ணம். அதுதான் அவர்களுக்கு எனர்ஜி. ஆனால் அது எங்கு பிரச்னையாக மாறும் என்றால், ரசிகர்கள் எல்லை மீறும் போது மட்டும் தான். ஆனால், அதையும் பிரபலங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எண்ணும் பிரபலம், இது போன்ற ரசிகர்களின் செயல்பாடுகளையும் அனுசரித்துக் கொள்ளதான் வேண்டும். அதை விஜய்சேதுபதி அழகாக கையாள்கிறார்” என்றார்

மக்கள் தொடர்பாளர் ஜான் கூறும் போது, “ பிரபலங்கள் வாரம் ஒரு முறை தங்களது ரசிகர்களை சந்திக்க வேண்டும். ஏனென்றால் தனக்கு பிடித்த பிரபலத்தை பார்க்க எங்கோ. ஏதோ ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதை ரசிகர் பயன்படுத்திக் கொள்ளதான் பார்ப்பார்.

ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. ஒரு வினாடி நின்று பிரபலத்திடம் அனுமதி கேட்டால், பிரபலங்கள் அந்த இடத்தைப் பொறுத்து அனுமதி தருவர். அதைத்தான் ஒவ்வொரு பிரபலமும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்க்கிறார்கள்.” என்றார்.

- கல்யாணி பாண்டியன் 

மக்களின் கருத்துக்கள் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com