டிச. 13இல் தொடங்குகிறது அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு?
அஜித் நடிக்க உள்ள அடுத்த படத்தையும் ஹெச். வினோத் இயக்க உள்ளார். இப்படத்திற்கு ‘வலிமை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடங்களை ஏற்க உள்ளதாக தெரிகிறது. அதற்கேற்ப அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டன. இளம் தோற்றத்திலும், மற்றொன்று முதிய தோற்றத்திலும் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்தது. ஆனால் இதுவரை படக்குழு இதனை உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி தொடங்க உள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் படப்பிடிப்பு இந்தியாவில் இல்லையாம். முதற்கட்ட படப்பிடிப்பை படக்குழு வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக பல நாடுகளில் முன்கூட்டியே லொகேஷன் பார்த்தாகி விட்டது என்றும் தெரிய வந்துள்ளது.
இப்படத்தையும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்த போனி கபூர்தான் தயாரிக்கிறார். தொடர்ந்து ஒரே இயக்குநருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு அளித்து வந்தார் அஜித். ஏறக்குறைய அஜித்தின் 4 படங்களை இதற்கு முன் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். அதே போல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கினார். அதே பாணி இப்போது தொடர்கிறது. ஹெச்.வினோத் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’யில் வழக்கறிஞராக அஜித் வேடம் ஏற்றிருந்தார். ‘வலிமை’யில் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார். க்ளீன் ஷேவ் செய்த அஜித் கதாபாத்திரம் தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆக்ஷன் படமான இதில் பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான காட்சிகள் திரைக்கதையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே அஜித் ரசிகர்களுக்கு இந்தக் கதை திரை விருந்தாக அமையும் எனக் கூறப்படுகிறது. ‘வலிமை’ வரும் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.