’ஜென்டில்மேன் டிரைவர் விருது’ வென்றபிறகு அஜித் முன்வைத்த கோரிக்கை!
நடிகர் அஜித்குமார், கார் பந்தயத்தில் சாதனை படைத்து, இத்தாலியில் 'ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் த இயர் 2025' விருதை பெற்றார். வெனிஸ் நகரில் நடைபெற்ற விழாவில், அவர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அஜித், இந்தியாவிலும் ரேசிங் சீரிஸ்களை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி ’அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கி கார் பந்தயங்களில் பங்கேற்றுவருகிறார்..
தனது சிறு வயது முதலே மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ரேஸிங்கில் ஆர்வம் கொண்டவரான நடிகர் அஜித்குமார், கார் ரேஸிங்கிலும் ஒரு அங்கமாக பங்கேற்று வந்தார். இடையே உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரேஸிங்கில் ஈடுபடாமல் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவந்த அஜித் தற்போது மீண்டும் கார் ரேஸ் களத்திற்கு திரும்பி வெற்றிகரமான ஒரு பயணத்தை ஏற்படுத்தியுள்ளார்.
2025 வருடத்தில் மட்டும் 2 கண்டங்களில் நடைபெற்ற 4 சர்வதேச தொடர்களில் 26 போட்டிகளில் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் அணி இரண்டு ரேஸில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் சினிமா மற்றும் கார் பந்தயத்தில் இந்தியாவை பெருமை படுத்திய அஜித்குமாருக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம பூஷன் விருதி வழங்கி கௌரவித்தது..
இந்தசூழலில் மீண்டும் ஒரு உயரிய விருதாக இத்தாலியில் ஜென்டில்மேன் டிரைவர் விருது அஜித்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது..
அஜித்துக்கு ஜென்டில்மேன் டிரைவர் விருது..
இத்தாலியில், நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமாருக்கு ``ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் த இயர் 2025” விருது வழங்கப்பட்டது. எஸ்.ஆர்.ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் சார்பில் வெனிஸ் நகரில் நடைபெற்ற விருது விழாவில், அஜித்குமார் தனது குடும்பத்துடன் பங்கேற்று விருதை பெற்றுக்கொண்டார். தொழிலதிபரும், கார் பந்தய வீரருமான பிலிப் சாரியோல் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.. குடும்பத்துடன் சென்று கலந்துகொண்ட அஜித் விருதை பெற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்..
அப்போது பேசிய அஜித்குமார், இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன், இந்தத் தருணத்தில் ரேசர் பிலிப் சாரியோலை நான் நினைவுகூர விரும்புகிறேன். சாரியோல் குறித்து நான் நிறைய நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் ஒரு அற்புதமான மனிதர், பலருக்கும் அவர் ஊக்கமளித்திருக்கிறார். இந்த மோட்டார் ஸ்போர்ட் உலகத்தில் என்னுடைய அனுபவம் சவாலாகவும், அதேநேரம் மகிழ்ச்சிகரமாகவும் இருந்திருக்கிறது.
இந்தச் சமயத்தில் என்னுடைய குழுவினருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் ஒரு கோரிக்கையையும் வைக்க விரும்புகிறேன். இந்தியாவுக்கும் இது போன்ற ரேசிங் சீரிஸ்களைக் கொண்டு வரவேண்டும், இந்தியாவும் மோட்டார் ஸ்போர்ட்டில் சர்வதேச அளவில் முன்னேறும் என்ற நம்பிக்கை இருப்பதாக’ தெரிவித்தார்..
மேலும் சமூகவலைதளத்தில் அஜித்தின் மனைவி ஷாலினி உயரிய விருது பெற்றதுகுறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்..

