அன்றும்! இன்றும்! அஜித்தை சுற்றும் அரசியல் வலை!

அன்றும்! இன்றும்! அஜித்தை சுற்றும் அரசியல் வலை!

அன்றும்! இன்றும்! அஜித்தை சுற்றும் அரசியல் வலை!
Published on

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம்பிடித்திருப்பவர் நடிகர் அஜித் குமார். ரசிகர் மன்றத்தை அவர் கலைத்தபோதும் அஜித்தின் ரசிகர் பட்டாளம் குறைந்தபாடில்லை. கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற அஜித்-ஷாலினி திருமணத்தில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நேரில் வாழ்த்தினர். அதன் பின்னர் பொது நிகழ்ச்சிகளிலும், திரைப்பட கலை நிகழ்ச்சிகளிலும் அவர் தோன்றுவது மிகவும் அரிதாகியது. எனினும், கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு, 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு அஜித் பேசும்போது, இதுபோன்ற விழாக்களில் எங்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி வரவழைக்கின்றனர் என்றார். அவரின் பேச்சைக் கேட்டு அரங்கில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்துநின்று கைதட்டினார். 

அதேவேளையில் அஜித்தின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தன. அஜித் ஜெயலலிதாவின் விசுவாசி என்றும் பேசப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்துடன் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்ற அஜித், தனது பேச்சுக்கான விளக்கத்தை அளித்தார். இந்தச் சந்திப்புக்கு பின்னர், 'அஜித் ஒரு தும்பை மலர், அது மாசற்ற மலர்' என அவரை பாராட்டி கருணாநிதி அறிக்கை வெளியிட்டு தொடர் சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் 2002ஆம் ஆண்டு திரைப்படத்துறைக்கு தமிழக அரசு வழங்கும் விழாவில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அஜித்திற்கு பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கினார். இதன் பிறகு அவ்வப்போது ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை அஜித் என தகவல்கள் உலாவின. அதிமுகவில் முக்கிய பொறுப்பை ஜெயலலிதா அவருக்கு வழங்க இருப்பதாகவும் செய்திகள் பரவின. இதற்கு காரணம் அவர் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்ததே காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் ஜெயலலிதா உயிரிழந்தபோது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த அஜித் மறுநாளே புறப்பட்டு சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இரவோடு இரவாக ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். 

இதற்கிடையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்றுவந்தபோது, காவிரி மருத்துவமனைக்கு சென்ற அஜித், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் உயிரிழந்தபோதும் ராஜாஜி மண்டபத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தபோதும் முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்தினார். அரசியலை விட்டு ஒதுங்கியே இருந்துவந்த நிலையில் கடந்தவாரம் அஜித்தை பின்னியது அரசியல் வலை.

திருப்பூரில் அஜித் ரசிகர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அஜித்தை பாராட்டியதோடு, அவரது ரசிகர்கள் பிரதமர் மோடியின் சாதனையை பரப்ப வேண்டும் என்றார். இது தமிழக அரசியலில் பூதகரமாக வெடித்தது. இந்நிலையில் தான் அரசியல் சாயத்தில் இருந்து காக்க திடீரென அதிரடி அறிக்கையை அஜித் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com