இந்திய வரலாற்றின் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரான சாணக்கியரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜய் தேவ்கன்.
சாணக்கியர் ஒரு சிறந்த போர் வீரர் மட்டுமல்லாமல் ஆசிரியர், பொருளாதார நிபுணர், அரசியல் ஆலோசகர் என பல்வேறு பரிமாணங்களில் தனித்திறமை கொண்டவராக திகழ்ந்தவர். சாணக்கியரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை பாலிவுட்டின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான நீரஜ் பாண்டே இயக்குகிறார்.
இது குறித்து அஜய் தேவ்கன், “சாணக்கியராக நடிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். நீரஜ் பாண்டேவின் படங்களை உற்று கவனித்திருக்கிறேன். இந்தப் படத்தையும் நீரஜ் பாண்டே மிக அழுத்தமாகவும் தெளிவாகவும் மக்கள் கண் முன்னே கொண்டுவருவார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஸ்பெஷல் 26, பேபி, ரஸ்டம், எம்.எஸ்.தோனி போன்ற படங்களை இயக்கியவர் நீரஜ் பாண்டே. இந்தப் படத்தில் அஜய் தேவ்கனை சாணக்கியராக மக்கள் நேசிப்பார்கள் என நீரஜ் பாண்டே தெரிவித்திருக்கிறார்.