இயக்குநர் ஹரி இயக்கும்‘சாமி ஸ்கொயர்’ படத்தில் த்ரிஷா வேடத்திற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
‘காக்கா முட்டை’படத்தின் மூலம் தரமான நடிகையாக அடையாளம் காணப்பட்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் மணிரத்னம் இயக்கும்‘செக்கச் சிவந்த வானம்’உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்து வருகிறார். நல்ல நடிகை என்ற பெயர் இவரை பாலிவுட் அளவுக்கு உயர்த்திக் கொண்டு போய் உள்ளது. இவரின் திறமையை உணர்ந்த இயக்குநர் ஹரி, தனது ‘சாமி’ படத்தின் முதல் பாகத்தில் த்ரிஷா நடித்த கேரக்டரில் இவரை நடிக்க வைத்திருக்கிறார். இவருக்கும் சீயான் விக்ரமிற்கும் இடையேயான காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் தற்போது பழனி உள்ளிட்ட பல பகுதிகளில் முகாமிட்டு படமாக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ், பிரபு, பாபி சிம்ஹா,சூரி, இமான் அண்ணாச்சி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக்கும், அதனைத் தொடர்ந்து இசை வெளியீடும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தமீன் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
‘சாமி ஸ்கொயர்’படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.