"பாதிக்கப்பட்டவர்களின் உணர்ச்சிகளை உள்வாங்கி நடித்தேன்!" - ஐஸ்வர்யா ராஜேஷ்

"பாதிக்கப்பட்டவர்களின் உணர்ச்சிகளை உள்வாங்கி நடித்தேன்!" - ஐஸ்வர்யா ராஜேஷ்
"பாதிக்கப்பட்டவர்களின் உணர்ச்சிகளை உள்வாங்கி நடித்தேன்!" - ஐஸ்வர்யா ராஜேஷ்

க/பெ ரணசிங்கம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 18 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. 8 நாள்கள் நடைபெற்ற இந்தத் திரைப்பட விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவை பிவிஆர் உடன் இணைந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் நடத்தியது. இந்த விழாவின் நிறைவு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டியில் லேபர், கல்தா, சூரரைப் போற்று, பொன் மகள் வந்தாள், மழையில் நனைகிறேன், மை நேம் இல் ஆனந்தன், காட் ஃபாதர், தி மஸ்கிட்டோ பிலாசபி, சீயான்கள், என்றாவது ஒருநாள், காளிதாஸ், க/பெ ரணசிங்கம், கன்னிமாடம் ஆகிய பங்கேற்றன. இதில் வெற்றி துரை சாமி இயக்கி தயாரித்த ‘என்றாவது ஒரு நாள்’ சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.

அதற்காக அவருக்கு விருதுடன் 2 லட்சம் பரிசும், தயாரிப்புக்காக 1 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. இது மட்டுமன்றி அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரத்திற்கும் சிறந்த ஒளிப்பதிவிற்காக ஒரு லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

இராண்டாவது படமாக  ‘சீயான்கள்’ திரைப்படம் தேர்வானது. அதற்காக விருதுடன் தயாரிப்பாளர் கரிகாலன் மற்றும் இயக்குநர் வைகறை பாலனுக்கு தலா 1 லட்சம் வழங்கப்பட்டது.

குறிப்பாக, க/பெ ரணசிங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சிறந்த நடிப்புக்காக (Special Mention) விருது வழங்கப்பட்டது.

இது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “க/பெ ரணசிங்கம் படத்தின் இயக்குநர் இந்தக் கதையை என்னிடம் கூறும்போது நான் அதிர்ந்து போனேன். ராமநாதபுரத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் இது போன்ற பிரச்னைகளை சந்தித்த பல பெண்களை நான் சந்தித்து பேசினேன். குடும்ப வறுமையை சமாளிக்க அங்குள்ள மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று துன்புறுகிறார்கள். அதில் ஒரு பெண், வெளிநாட்டில் இறந்து போன தனது கணவனின் உடலை கொண்டு வர ஒரு வருடமாக  முயற்சித்துள்ளார்.

ஆனால், அந்த முயற்சி இறுதியில் தோல்வியில் முடிந்தது. அவர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சிகளை உள்வாங்கிதான் அரியநாச்சியாக படத்தில் நடித்தேன். குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழப்பது 'அறம்' படத்திற்கு முன்னால் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், அந்தப் படம் வெளியான பிறகு, ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்திற்காக நாடே துடித்தது. இந்தப் படத்தை எடுத்த இயக்குநர் விருமாண்டிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

- கல்யாணி பாண்டியன், சத்ய சுப்ரமணி 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com