மற்றவர்கள் நடிக்க தயங்கிய ரோலில் தைரியமாக நடித்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்

மற்றவர்கள் நடிக்க தயங்கிய ரோலில் தைரியமாக நடித்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மற்றவர்கள் நடிக்க தயங்கிய ரோலில் தைரியமாக நடித்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்

மற்ற கதாநாயகிகள் நடிக்கத் தயங்கிய ரோலில் தைரியமாக நடித்தேன். அதற்கு அங்கீகாரமாக இப்போது விருதும் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான படம் காக்கா முட்டை. இதில் கதாநாயகியாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு 2014-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விருது பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுகுறித்து பேசும்போது " காக்கா முட்டை என் வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம். காக்கா முட்டை படத்தில் நடிக்கும் போதே படத்தின் மேல் எனக்கு அதிக நம்பிக்கையும், நேசமும் இருந்தது. மற்ற கதாநாயகிகள் இந்த ரோலில் நடிக்க தயக்கம் காட்டினார்கள். ஆனால் என்னால் முடியும் என்ற நம்பிக்கையில் தைரியமாக நடித்தேன். படம் வெளியாவதற்கு முன்னதாகவே படக்குழுவினரிடம் இருந்து எனது நடிப்பிற்கு நல்ல பாராட்டு கிடைத்தது. அதேபோல் படம் வெளியான பின்பும் கூட படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது தமிழக அரசு சிறந்த நடிகைக்கான விருது அறிவித்து கௌரவித்துள்ளது. இந்த சமயத்தில் காக்கா முட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் மணிகண்டனுக்கு என மனமார்ந்த நன்றியை தெவித்துக் கொள்கிறேன். காக்கா முட்டை படத்தை தூக்கிக் கொண்டாடிய ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்" என கூறியுள்ளார்.

காக்கா முட்டை படத்தில் 2 குழந்தைகளுக்கு தாயாக நடித்து நல்ல நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பொதுவாக கதாநாயகிகள் அக்கா, தங்கை போன்ற வேடங்களில் நடிக்க கூட தயக்கம் காட்டுவார்கள். ஆனால் தைரியமாக அம்மாவாக நடித்து விருதையும் பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com