அட்வான்டேஜ் எடுத்த மாணவரால் சங்கடமான அபர்ணா பாலமுரளி - மன்னிப்பு கேட்ட கல்லூரி சங்கம்!

அட்வான்டேஜ் எடுத்த மாணவரால் சங்கடமான அபர்ணா பாலமுரளி - மன்னிப்பு கேட்ட கல்லூரி சங்கம்!
அட்வான்டேஜ் எடுத்த மாணவரால் சங்கடமான அபர்ணா பாலமுரளி - மன்னிப்பு கேட்ட கல்லூரி சங்கம்!

கல்லூரி விழா மேடையில் வரவேற்க வந்த மாணவர் ஒருவர், நடிகை அபர்ணா பாலமுரளியிடம், தவறாக நடக்க முயன்ற சம்பவம் வைரலாகி சமூகவலைத்தளத்தில் கண்டனங்களை குவித்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட சட்டக்கல்லூரியின் சங்கம் மன்னிப்புக்கோரியுள்ளது.

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்காக கடந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றவர் பிரபல மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி. இவர், தற்போது நடித்துள்ள ‘தங்கம்’ என்ற மலையாளப் படத்தின் புரமோஷனுக்காக, கேரள மாநிலம் எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, சக நடிகர் வினீத் சீனிவாசன் மற்றும் படக்குழுவினருடன் சென்றிருந்தார்.

அங்கு மேடையில் அமர்ந்திருந்தபோது, அபர்ணா பாலமுரளியை பூ கொடுத்து வரவேற்க வந்த மாணவர் ஒருவர், அவரை வலுக்கட்டாயமாக இருக்கையிலிருந்து எழுப்பியதுடன் புகைப்படம் எடுப்பதற்காக அவரது தோள் மீது கைப்போட முயற்சித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத நடிகை அபர்ணா பாலமுரளி, அதிர்ச்சியுடனும், சங்கடத்துடனும் மாணவரிடமிருந்து விலகிச் சென்று மீண்டும் இருக்கையில் அமர்ந்தார்.

எனினும் சிறிதுநேரம் கழித்து மேடைக்கு வந்த அந்த மாணவர், அபர்ணா பாலமுரளியிடம் மன்னிப்பு கேட்டதுடன், தான் ஏன் அவ்வாறு நடந்துக்கொண்டேன் என்றும் விளக்கமளித்தார். மன்னிப்பு கேட்க வந்தபோதும் மீண்டும் அவர் கைக்கொடுக்க வந்த நிலையில், அபர்ணா பாலமுரளி, மாணவருடன் கைக்குலுக்க மறுத்துவிட்டார். இந்த நிகழ்வுகளால் நிகழ்ச்சி முடிந்து காரில் செல்லும் வரையிலுமே சிறிது பதற்றத்துடனும், கோபத்துடனும் நடிகை அபர்ணா பாலமுரளி காணப்பட்டார்.

இந்த வீடியோ நேற்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினரும், தவறாக நடக்க முயன்ற மாணவர் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு கண்டனங்கள் தெரிவித்தனர். மேலும் மேடையில் அமர்ந்திருந்த நடிகர் வினீத் சீனிவாசன் உள்பட படக்குழுவினர் யாருமே தடுக்காதது குறித்தும் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கல்லூரி சங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. தனது சமூகவலைத்தளத்தில், நடிகை அபர்ணா பாலமுரளியின் மனதை காயப்படுத்தும் வகையில் நடந்த சம்பவத்திற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும், இந்தச் சம்பவத்தை மிகவும் கவலைக்குரிய சம்பவமாக எடுத்துக்கொண்டுள்ளோம் எனவும், விரும்பத்தகாமல் நடந்த இந்த விஷயத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com