திருப்பூர் | கார் ரேஸை தொடர்ந்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித் குமார்.. வைரல் வீடியோ
திருப்பூர் மாவட்டத்தில் நடிகரும், கார் ரேஸருமான அஜித்குமார், துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி கார் ரேஸ், போட்டோ கிராபி, துப்பாக்கி சுடுதல் என பல விஷயங்களில் தன்னை ஈடுப்படுத்தி வருகிறார்.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த போதிலும், சினிமாவில் நடிப்பதற்கு இடையில், ரேஸுக்கென நேரம் ஒதுக்கி, அதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில்தான் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் தகுதிச்சுற்றில் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் அணி, 7வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து 992 பிரிவு கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்த அஜித்குமார் ரேஸிங் அணி இந்தியாவிற்கு பெருமையை தேடித்தந்தது. அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கல், ஜெர்மனியில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டிருந்தார் அஜித்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் பகுதியில் கொங்கு நாடு ரைப்பில் கிளப் என்ற பெயரில் துப்பாக்கி சூடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மூன்று இடங்களில் கிளை உள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள இந்த கிளைக்கு வருகை தந்த நடிகர் அஜித்குமார் அங்கு உள்ள வசதிகளை பார்வையிட்டு துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.. இது குறித்த வீடியோவை அவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் அஜித் கடந்த இந்த 2022 ஜூலை 27ஆம் தேதி அன்று திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று, 4 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 6 பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவை பொறுத்தவரை அஜித்குமார் நடிப்பில் இந்த ஆண்டு இதுவரை இரண்டு படங்கள் வெளியாகின. அதில், ‘விடாமுயற்சி’ திரைப்படம் மற்றொன்று ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.. இதைத் தொடர்ந்து அஜித்குமார் நடிப்பில் எந்தப் படங்களும் வெளியாகவில்லை. அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

