ADOLESCENCE
ADOLESCENCEpt

ZEN கிட்ஸ் உலகம்: டீனேஜ் பிள்ளைகளின் உலகத்தைப்பற்றி பேசும் 'அடலசன்ஸ்' மினி சீரிஸ்! ஓர் பார்வை

இன்ஸ்டாகிராம் என்ற உலகத்தில் இப்போதைய பதின்பருவத்தினரின் உலகம் வேறுவிதமாக இருக்கிறது. இதனை நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல சொல்கிறது பிரிட்டிஷ் மினி சீரிசான 'ADOLESCENCE'
Published on

'அடலசன்ஸ் '

எமோஜிக்களுக்கு பின்னால்

சோஷியல் மீடியாவில் ஒரு புகைப்படத்தையோ, காட்சியையோ பார்க்கிறீர்கள்.. அதற்கு ஒரு இதயக்குறி இட நினைக்கிறீர்கள்..என்ன செய்வீர்கள்.? அதிகபட்சம் சிவப்பு இதயக்குறியை பறக்க விடுவீர்கள். இந்த சிவப்பு இதயக்குறி தவிர, வேறு எந்த எமோஜிக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?

தெரியாது என்பவர்கள் 90s கிட்சாக இருப்பீர்கள். அல்லது அதற்கு முந்தைய தலைமுறையாக இருப்பீர்கள். இப்போதைய ZEN கிட்ஸ் ஒவ்வொரு எமோஜிக்கும் ஒவ்வொரு அர்த்தம் வைத்திருக்கிறார்கள். இன்ஸ்டாகிராம் என்ற உலகத்தில் இப்போதைய பதின்பருவத்தினரின் உலகம் வேறுவிதமாக இருக்கிறது. இதனை நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல சொல்கிறது பிரிட்டிஷ் மினி சீரிசான 'ADOLESCENCE'

மொத்தம் நான்கே எபிசோட்கள்தான். ஒவ்வொன்றும் ஏறக்குறைய ஒருமணிநேரம். ஏன் இதைப்பற்றி பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இப்போது பல நாடுகளும் இந்த சீரிஸ் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்த சீரிசை பிரிட்டிஷ் பள்ளிகளில் திரையிட்டு, பதின்பருவத்தினர் மத்தியில் விழிப்பை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர் Keir Starmer.

இந்த மினி சீரிஸ்,  பிரிட்டிஷூக்கான பிரச்னையை மட்டும் பேசவில்லை. இன்றைய டீனேஜ் பிள்ளைகளின் உலகத்தைப்பற்றி, அவர்களின் புரிதல், சோஷியல் மீடியாக்கள் அவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள், அவர்கள் சந்திக்கும் அழுத்தங்களைப் பேசுகிறது.

அடலசன்ஸ் - மினி சீரிஸ்

இந்த மினி சீரிசின் கதாநாயகன் ஜேமி என்ற 13 வயது சிறுவன். ஒரு காலை நேரத்தில் ஜேமியின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைகிறது காவல்துறை. உறக்கத்திலேயே சிறுநீர் கழித்து மலங்க, மலங்க விழித்துக்கொண்டிருக்கும் 13 வயது ஜேமியை காவல்துறை விசாரணைக்காக அழைத்துச்செல்கிறது. பெற்றோர் கதற, அக்கா அழ, ஜேமியை அழைத்துச்செல்லப்படும்போது, ஒவ்வொரு பெற்றோருக்கும் பதற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இவன் மீதான குற்றம் தனது வகுப்புத் தோழியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டான் என்பதுதான். நான் செய்யவில்லை என்று சொல்லும் மகனை நம்பும் சாதாரண பிளம்பரான தந்தை, தனது மகன் செய்த குற்றத்தை சிசிடிவி காட்சிப்பதிவில் பார்க்கும்போது அதிர்ச்சியில் உறைவதையும், செய்வதறியாது திகைப்பதையும் காட்சி படுத்தியிருக்கும் விதம் காண்பவர்களுக்கும் பதற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு சிறுவனை கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், அவனுக்கான உரிமைகளை தெரியப்படுத்துதல், அவனுக்கான சோதனைகளின்போது தந்தையை உடனிருக்க வைத்தல் என்ற வழிமுறைகளை இந்த எபிசோடில் தெளிவாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள்.

2 ஆவது எபிசோடில் காவல் அதிகாரிகள் பள்ளியில் சென்று விசாரிப்பது விவரிக்கப்படுகிறது. அதே பள்ளியில் படிக்கும் காவல் அதிகாரியின் மகன் மூலமாகத்தான் இந்த கொலைக்கான காரணம் வெளிப்படுகிறது. இன்ஸ்டாவில் இடப்படும் ஒவ்வொரு இடுகுறிக்கும், எமோஜிக்களுக்குமான அர்த்தம், இன்றைய இளம் தலைமுறையினர் தனி உலகத்தில் இயங்கிக்கொண்டிருப்பதை முகத்தில் அறைவது போல சொல்கிறது.  தன்னை INCEL ஆக குறிப்பிட்ட பெண்ணை கத்தியால் குத்திக்கொல்லும் அளவுக்கு இட்டுச்செல்கிறது சோஷியல் மீடியா தாக்கம். தான் அழகில்லை என்று நம்புவதோடு, பாலியல் உறவிற்கான வாய்ப்புகள் தனக்கு இல்லை என்று 13 வயது சிறுவனை நம்ப வைக்கும் அளவுக்கான உளவியல் சிக்கல்கள், உடல் பற்றிய புரிதல் அற்ற தன்மையை இந்த சீரிஸ் வெளிப்படுத்துகிறது. சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் கற்பிக்கும் கருதுகோள்கள், இன்றைய டீனேஜ் பிள்ளைகளிடையே எப்படிப்பட்ட உணர்வு குழப்பங்களை ஏற்படுத்துகின்றன என்ற சிந்தனைகளுக்குள் நம்மை இட்டுச்செல்கிறது.  

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட எபிசோட்கள்
இந்த சீரிசின் முக்கியமான அம்சம், ஒவ்வொரு எபிசோடும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டவையாக இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு காட்சியையும் நாம் அருகில் இருந்து பார்க்கும் உணர்வை தருகிறது. சிங்கிள் ஷாட் என்பதற்காக காட்சிகள் மாற்றத்திலோ, கதாபாத்திரங்களின் உணர்வுகளிலோ குறைவைக்கும் விதத்தில் எடுக்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மூன்றாவது எபிசோடில் ஜேமியும் மனநல மருத்துவரும் பேசிகொள்ளும் காட்சி மட்டும் சுமார் அரைமணிநேரம் நீடிக்கிறது. இந்த சிங்கிள் ஷாட் முழுவதும் அந்த சிறுவன், தனது குழந்தைமை, சைக்கோதனம், கோபம், சமாதானம், கொந்தளிப்பு என அனைத்தையும் கொட்டியிருப்பதோடு, இன்றைய இளம்பருவத்தினரின் மனவோட்டம் பற்றி அழகாக வெளிப்படுத்தியிருக்கிறான். ஜேமியாக நடித்திருக்கும் ஓவன் கூப்பருக்கு இதுதான் அறிமுகத் தொடர் என்பது ஆச்சரியப்படுத்துகிறது. அசத்தியிருக்கிறான் ஓவன் கூப்பர்.

ADOLESCENCE
”AK வரார் வழிவிடுடா” "கொஞ்சம் இருங்க பாய்” - தெறிக்கவிடும் அஜித் குமாரின் குட் பேட் அக்லி ட்ரெய்லர்!


இந்த தொடரில் காவல் அதிகாரியாக நடித்திருக்கும் ஆஷ்லே வால்டர்ஸ், இத்தொடரின் தொடக்கக் காட்சியில் வயிற்றுவலி என்று பொய் சொல்லும் தனது மகனைப் பற்றி பேசுவார். பள்ளியில் விசாரணையின்போது தனது மகனும் கேலிக்கு ஆளாவதை பார்க்க நேரிடுகிறது. பள்ளியில் விசாரணை முடிந்தபிறகு தனது மகனை சாப்பிட அழைக்கும்போது அவரிடம் வெளிப்படும் தந்தை என்ற பொறுப்பு அவர் இத்தனை நாட்கள் செய்யாதிருந்ததை சுட்டுவதாக இருந்தது.

குடும்பம், சமூகத்தின் பொறுப்பு

ஒரு சிறுவன் குற்றவாளியாகிறான் எனில் அவன் மட்டும் குற்றவாளி அல்ல, செல்போனில் மூழ்கிக்கிடக்கும் அவனது உலகத்தை கவனிக்க மறந்த பெற்றோர், அல்லது தங்கள் வேலைகளில் மூழ்கி, பிள்ளைகளுடன்  நேரம் செலவிடுவதை குறைத்த குடும்பங்கள், உணர்வு ரீதியாக சமூகம் ஏற்படுத்தும் தாக்கங்கள் என ஒவ்வொருவருமே குற்றவாளிகள்தான். இந்த சீரிஸ் பார்த்தவர்கள் அந்த சிறுவனின் நடிப்பை பெரிதும் புகழ்கிறார்கள். ஆனால், பெற்ற மகனை குற்றவாளியாக பார்க்க நேரிடும் ஒரு தந்தையின் உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார் மில்லர் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்டீபன் கிரஹாம். இவர், இந்த தொடரை, ஜேக் த்ரோன் உடன் இணைந்து உருவாக்கியதோடு, திரைக்கதையையும் எழுதியிருக்கிறார்.  இயலாமை, மகனை பிரிந்த துயர், சுற்றம் காட்டும் போலி முகம், குடும்பத்தினர் சந்திக்கும் பிரச்னைகளை தனது உடல்மொழியாலும், முகபாவங்களாலும் வெளிப்படுத்திவிடுகிறார் இந்த தந்தை.  மகளை வளர்த்தது போலத்தானே மகனையும் வளர்த்தோம்? எங்கு தப்பு நேர்ந்தது என்று கலங்கும் அந்த தந்தையின் கதாபாத்திரம், இன்றைய பெற்றோரின் பிரதிபலிப்பு..

செல்போனில் எதையோ பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நாம் அலட்சியமாக இருப்பதன் ஆபத்தையும், தங்கள் பிள்ளைகளின் உலகத்திற்குள் இயங்கும் மாய பிம்பங்கள் உண்டாக்கும் தாக்கங்களையும் ஒவ்வொரு பெற்றோரும் உணரவேண்டிய காலம் இது என்பதைச் சொல்கிறது பிலிப் பரன்டினி இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்தத் தொடர்,  'அடலசன்ஸ்'

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com