சுவாரசியமான மேக்கிங் ஓகே..லாஜிக் மட்டும் சேர்ந்திருந்தால்..- ’டிரைவர் ஜமுனா’ திரைப்பார்வை

சுவாரசியமான மேக்கிங் ஓகே..லாஜிக் மட்டும் சேர்ந்திருந்தால்..- ’டிரைவர் ஜமுனா’ திரைப்பார்வை
சுவாரசியமான மேக்கிங் ஓகே..லாஜிக் மட்டும் சேர்ந்திருந்தால்..- ’டிரைவர் ஜமுனா’ திரைப்பார்வை

தவறான நபர்களை காரில் ஏற்றிச்செல்லும் டிரைவர் ஜமுனா என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார் என்பதே இந்த டிரைவர் ஜமுனா.

தன் அப்பாவின் மரணத்துக்குப் பின்னர், கார் ஓட்டுநராக குடும்பத்தை நடத்திவருகிறார் ஜமுனா. தம்பியும் வீட்டைவிட்டு ஓடிவிட, நோயுற்ற அம்மாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் மொத்தமாய் ஜமுனாவின் மேல் விழுகிறது. இப்படியானதொரு சூழலில் ஏற்கெனவே பிரச்னை செய்துவிட்டு, அடுத்த பிரச்னைக்கு தயாராகும் ஒரு கூட்டம் கார் புக் செய்கிறார்கள். அந்த புக்கிங் நாம் எதிர்பார்த்ததைப் போலவே ஜமுனாவின் காருக்கு வருகிறது. பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படை நபர்களான இவர்களின் அடுத்த டார்கெட், ஊருக்குள் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கும் ஓர் அரசியல்வாதி. ஒரு பக்கம், இந்த கூலிப்படையைக் காவல்துறையும் தீவிரமாக தேடிவருகிறது. இந்த கார் பயணத்தில் நாம் சந்திக்கும் இந்த மனிதர்கள் எல்லாம் தற்செயலாக இணைந்துகொள்கிறார்களா அல்லது எல்லாமே ஏற்கெனவே செய்த பழி பாவங்களின் பின்வினையா என்பதாக தொடர்கிறது டிரைவர் ஜமுனா.

டிரைவர் ஜமுனாவாக ஐஷ்வர்யா ராஜேஷ். மீண்டுமொரு பெண்மைய சினிமாவில் ஐஷ்வர்யா. ஒரு கார் டிரைவர் பெண் என்ன அளவுகோலில் நடிக்க வேண்டுமோ அதைக் கச்சிதமாக செய்திருக்கிறார். காரில் உட்கார்ந்திருக்கும் மூன்று வில்லன்களும் என்ன என்னமோ செய்கிறார்கள், ஆனால் நமக்கு அவர்களைப் பார்க்கும் போது பயம் தான் தொற்றிக்கொள்ள மறுக்கிறது. வடிவேலுவின் சிரிப்பு போலீஸ் போல இவர்கள் சிரிப்பு வில்லன்களாகவே காட்சி அளிக்கிறார்கள். காரில் பயணிக்கும் மற்றுமொரு நபராக ஸ்டாண்ட் அப் காமெடியன் அபிஷேக். வில்லன் சிரிப்பு மூட்டினால், காமெடி செய்ய வேண்டிய அபிஷேக்கோ கடுப்பேற்றுகிறார். 'போலிஸுக்குப் போ' என ஐஷ்வர்யா ராஜேஷ் வாயசைவில் சொல்வதைக் கூட பின்னணி இசையில் எல்லாம் செய்து கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என அபிஷேக் நடித்திருப்பது கடுப்பேற்றலின் உச்சம்.

கொரியன் சினிமா பாணியில் பரபர ஆக்‌ஷன் த்ரில்லரில் எமோஷனலைக் கலந்து வெரைட்டியாக இயக்கியிருக்கிறார் கின்ஸ்லின். கோகுல் பினாயின் ஒளிப்பதிவும், ராமரின் படத்தொகுப்பும் படத்துக்குப் பெரும்பலம். இறுதியில் சம்பிரதாயமாக வரும் பாடலைத் தவிர்த்துவிட்டால், படத்தில் பாடல்களே இல்லை. ஆனால், அதற்கும் சேர்த்து பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஜிப்ரான்.

கிட்டத்தட்ட படம் முடியும் போது, இதெல்லாம் ஏன் நடந்தது தெரியுமா என ஐஷ்வர்யா ராஜேஷ் கிளாஸ் எடுக்கும் போது, 'எவ்ளோ பெரிய மாத்திரை'யென சொல்ல வைத்துவிடுகிறார். அதெப்படி எல்லாவற்றையும் பிளான் செய்ய முடியும் என்கிற கேள்வியும் நமக்கு ஹெவியாக எழுகிறது. சரி சரி த்ரில்லர் என்பதால் இதையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது போல.

சுவாரஸ்யமான மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் லாஜிக் சேர்த்திருந்தால் டிரைவர் ஜமுனாவின் காரில் நாமும் சேஃபாக பறந்திருக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com