ஓடிடி திரைப்பார்வை: ’ஆதாமிண்ட மகன் அபு’- இஸ்லாமிய தம்பதியின் மெக்கா கனவும் அன்பான வாழ்வும்

ஓடிடி திரைப்பார்வை: ’ஆதாமிண்ட மகன் அபு’- இஸ்லாமிய தம்பதியின் மெக்கா கனவும் அன்பான வாழ்வும்

ஓடிடி திரைப்பார்வை: ’ஆதாமிண்ட மகன் அபு’- இஸ்லாமிய தம்பதியின் மெக்கா கனவும் அன்பான வாழ்வும்
Published on

இந்திய சினிமாவை பொறுத்த வரை இஸ்லாமியர்களின் வாழ்வை சித்தரிக்கும் கதை என்றால் அவர் ஒரு பயங்கரவாதியாக இருப்பார் அல்லது பிற்போக்கு வாதியாக இருப்பார். இவ்விரண்டும் இல்லாவிடில் மத ஒற்றுமையை சித்தரிக்கிறோம் என்ற பெயரில் தேவையில்லாத வசனங்கள் காட்சிகள் என சேர்த்து ரசிகனை பிளிந்து தள்ளி இருப்பார்கள். இப்போது மெல்ல அந்த நிலை மாறிக்கொண்டிருக்கிறது என்றலும் இன்னும் முழுமையடையவில்லை.

ஒரு இஸ்லாமியரானவர் உன்னைப் போல் என்னை போல் இந்நாட்டின் சக குடிமகன் நம்மோடு வசிக்கும் ஒரு குடியானவன் அவ்வளவுதான் என்ற எதார்த்த பார்வையில் வந்த சினிமாக்கள் வெகு சொர்ப்பம். அவ்வகையில் மலையாளத்தில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த “ஆதாமிண்ட மகன் அபு” என்ற திரைப்படம் தனிக் கவனம் பெறுகிறது.

75 வயதான ஏழை கூலி தொழிலாளி அபுவும் அவரது மனைவி அய்ஷூம்மா’வும் ஹஜ் புனித பயணம் செல்ல பிரியப்படுகிறார்கள். அதற்கென அவர்களிடம் போதிய பணம் இல்லாத போதும் சேமித்து வைத்திருக்கும் கையிருப்பைக் கொண்டு பாஸ்போர்ட் எடுப்பது டிராவல் ஏஜென்சியை அணுகி விவரம் பெறுவது போன்ற பயண ஏற்பாடுகள் நடக்கின்றன. எல்லா ஏற்பாடுகளும் செய்து பிறகு அவர்களால் மெக்கா செல்ல இயலவில்லை அதற்கு என்ன காரணம் என படம் பார்த்தால் புரியும்.

காட்சியொன்றில் போலீஸ் ஒருவர் அபுவின் வீட்டை நோட்டமிட்டபடி இருக்கிறார், பயந்து போன அய்ஷூம்மா கலவரப்பட பிறகு அது பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்கான சாதாரண விசாரணை என தெரியவருகிறது. இந்நிலையில் பயண நாள் நெருங்கிவர பணப் பற்றாக் குறையை சமாளிக்க தங்கள் கால்நடைகளை விற்கிறார்கள். வீட்டின் வாசலில் இருந்த பலா மரத்தை விலை பேசுகிறார்கள். இப்படியாக மெக்க செல்வதற்கான பயண காரியங்கள் நடக்கின்றன.

மரத்தை விலைபேசி வெட்டிய கலாபவன் மணியிடம் மீதி தொகையை பெற அபு செல்கிறார். “அந்த மரம் கரையான் அரித்தமரம், அதனால் ஒரு பயனும் இல்லாமல் போச்சு அபு, ஆனாலும் நீங்க ஹஜ்’க்கு போறதால நான் பேசின பணம் தரேன்” என்கிறார் கலாபவன். ஆனால் அபுவிற்கு அது சரியாக படவில்லை. பணம் வேண்டாம். என சொல்லி நகர்கிறார்.

இத்தம்பதிகளின் மகன் என்றோ ஒரு நாள் வளைகுடா நாட்டிற்கு சென்றவன் பிறகு இவர்களை மறந்தே போய்விடுகிறான். தன் மகன் பற்றி அய்ஷூம்மா பேச்சை எடுத்தால் அபு’விற்கு கோவம் வரும். ஒரு இரவில் நிலவொளியில் சாய்வுநாற்காலியில் அபு சாய்ந்து அமர்ந்து கொள்ள அருகில் அய்ஷூம்மா’வும் அமர இருவரும் தங்கள் கையில் பாஸ்போர்டை வைத்து அதிலிருக்கும் அவர்களின் புகைப்படம் பற்றியும் செல்லப் போகும் பயணம் பற்றியும் பேசிக் கொள்கிறார்கள். அந்த இரவில் முதுமையின் அன்பினை அழகாக காட்சி படுத்தியிருப்பார் ஒளிப்பதிவாளர் மது அம்பாட். இரவை காட்சிபடுத்தும் சவாலை வெல்லும் எந்த ஒளிப்பதிவாளனும் கவனம் பெறுவான் என்பதற்கு மது அம்பாட் காட்சிகளின் சாட்சி.

பொழுதுவிடிகிறது, மீதி தொகைக்கு என்ன செய்வதென தெரியாமல் அபு தவிப்பதை அறிந்த அவ்வூர் பள்ளி ஆசிரியரும் அபுவின் நண்பருமாக நடித்திருக்கும் நெடுமுடி வேணு பணம் கொடுக்க முன்வந்தாலும் “சொந்த பணத்தில் தான் ஹஜ் போகனும்” என அபு அதனை அன்போடு மறுத்துவிடுகிறார்.

நாட்கள் நெருங்க அவர்களுக்கு பதட்டமாகிறது, அய்ஷூம்மா சொல்கிறாள் “நாம ரெண்டு பேரும் போய் வரத்தானே பணம் போதல, நீங்க மட்டும் போய் வரலாமே” என யோசனை சொல்ல அபு ”நீயில்லாமல் நான் மட்டும் போகமாட்டேன்.” என செல்லமாக கோவிக்கிறார்.

ஹஜ் செல்வதற்கு ஆயத்தமாகிற நாட்களில் அபுவும் அவரது மனைவியும் தங்கள் கிராமத்தில் தங்களோடு வாழ்வை பகிர்ந்துகொண்ட கிராமவாசிகள் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள். என பலரையும் சந்தித்து விடை பெறுகிறார்கள். அதில் அபுவின் நிலத்தை அபகரிக்க முயன்ற ஒருவரும் அடக்கம். அவர் தன் தவறை உணர்ந்தவராக அபுவிடம் மன்னிப்பும் பயணத்துக்கு வாழ்த்தும் சொல்கிறார்.

இந்த காட்சியை இயக்குனர் சலீம் அகமது வெகு நேர்த்தியாக கையாண்டிருப்பார். கோபதாபங்கள் தாண்டி நாம் மனிதர்கள் இங்கு எதையும் யாரும் எடுத்துச்செல்லப் போவதில்லை என்பதை காட்சிகளின் மூலம் ரசிகனுக்குச் சொல்லி இருக்கிறார். ஹஜ் யாத்திரைக்கான நாள் நெருங்கியும் பணம் ஏற்பாடாகாததால் பயணம் ரத்தாகிறது. “நாம் அந்த பலாமரத்தை வெட்டியிருக்கக் கூடாது, அதுவும் ஒரு உயிர் தானே…? அதில் எத்தனை பச்சிகள் வாழ்ந்தன. நாம் அதை வெட்டியதால் தான் அல்லா இந்த வருடம் நம்மை அழைக்கவில்லை, அடுத்த வருடம் போகலாம்” என இருவரும் சமாதானமாகிறார்கள்.

இறுதி காட்சியில் அதிகாலை இருளும் கிழக்கின் ஒளியும் சந்திக்கும் வேளையில் பள்ளிவாசல் அருகே மரமொன்றை நட்டு தண்ணீர் ஊற்றுகிறார் அபு. பின்னனியில் பள்ளிவாசலின் அதிகாலை தொழுகை ஒலி பனிக் காற்றில் அத்தர் போல் பரவுகிறது. பள்ளிவாசலை நோக்கி தள்ளாடி நடக்கிறார் அபு. அவரை பார்த்தவாரே அய்ஷூம்மா நின்றுகொண்டிருக்கிறாள். ஐசக் தாமசின் அற்புத பின்னனி இசையில் அந்த நாள் அழகாக விடிந்தது.

முழுக்க முழுக்க செண்டிமெண்ட் மற்றும் மென்மையான கருணைகோரும் காட்சிகள் ஒரு வகையில் சலிப்பையும் தருகின்றன என்பது மறுப்பதற்கில்லை. இயல்பு வாழ்க்கையினை கொஞ்சம் மிகைப்படுத்திக்காட்டியிருக்கும் உணர்வும் எழாமல் இல்லை., ஆனால் மேடு பள்ளங்களைத் தாண்டித்தானே நதியானது கடைலை அடையும் இப்படத்தின் நிறைகளோடு ஒப்பிடுகையில் இவையெல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிவிடுகிறது. அபுவாக நடித்திருக்கும் சலீம் குமாரின் நடிப்பு அருமை. இத்திரைப்படத்தில் நடித்த போது அவருக்கு வயது 40 ஆனால் ஒரு 70 வயது முதுமையை தனது நடிப்பில் அசால்ட்டாக தாங்கி நடித்திருப்பார். அவரது மனைவி அய்ஸூம்மாவாக நடித்திருக்கும் ஷரீனா வாஹப் நல்ல பொறுத்தம்.

இயக்குநர் சலீம் அகமதின் முதல் சினிமாவான இப்படம் 2011-ஆம் வருடம் வெளியானது. சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படம், சிறந்த பின்னனி இசை என தேசியளவில் விருதுகள் பெற்ற இப்படம் கேரள மாநில அரசின் விருகளையும் அள்ளியது. பீல் குட் படங்கள், உணர்வுபூர்வமான செண்டிமெண்ட் சினிமா ரசிகர்களுக்கு ஆதாமிண்ட மகன் அபு பிடிக்கும். தற்போது இந்த சினிமா அமேசான் ப்ரைமில் காணக் கிடைக்கிறது.

- சத்யா சுப்ரமணி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com