”கொரோனா தேவி அம்மன்போல் இருப்பது எனக்கு ஆசிர்வாதம்தான்!” – வனிதா சிறப்புப் பேட்டி

”கொரோனா தேவி அம்மன்போல் இருப்பது எனக்கு ஆசிர்வாதம்தான்!” – வனிதா சிறப்புப் பேட்டி
”கொரோனா தேவி அம்மன்போல் இருப்பது எனக்கு ஆசிர்வாதம்தான்!” – வனிதா சிறப்புப் பேட்டி

கோவையில் வைக்கப்பட்ட 'கொரோனா தேவி' சிலை, அச்சு அசலாக நடிகை வனிதா விஜயகுமாரின் உருவம்போலவே இருப்பதாக சமூக வலைதளங்களில்  வைரலாகிக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம் கொரோனா தேவி சிலையையும் மற்றொரு பக்கம் வனிதா விஜயகுமாரின் புகைப்படத்தையும் இணைத்து மீம்ஸ்கள் வேகமாய் பரவ ஆரம்பித்திருக்கின்றன. வனிதாவின் முகத்தை நினைவில் வைத்துதான்  இச்சிலையை வடித்திருப்பார்களோ என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு உள்ளது கொரோனா தேவியின் சிலை என்பது அந்த நெட்டிசன்கள் முன்வைத்த கருத்து. இதுகுறித்து, வனிதா விஜயகுமாரிடமே தொடர்புகொண்டு பேசினோம்…

கொரோனா தேவி சிலை உங்கள் முகம்போல் இருப்பதாக மீம்ஸ்கள் வலம் வருகிறதே… எப்படி பார்க்கிறீர்கள்?

  “என் முகத்தை கொரோனா தேவி அம்மனோடு தொடர்புபடுத்தியிருப்பது ரொம்ப சந்தோஷமான விஷயம். இது, தவறானது கிடையாது. நான் மூக்குத்தி போடுவேன். கொரோனா தேவி அம்மனுக்கும் மூக்குத்தி  போட்டதால்  என்னைபோல் தெரிகின்றது என்று நினைக்கிறேன். கொரோனா தேவியோடு என் முகத்தை பொருத்தி வந்த  மீம்ஸ்களைப் பார்த்துவிட்டு பல நண்பர்கள்  அனுப்பினார்கள். அதனைப் பார்த்தவுடன் நானும் குழந்தைகளும் சிரித்துவிட்டோம். கொரோனா தேவி அம்மனை பார்க்கும்போது பலருக்கும் என்னை பார்க்கிற மாதிரி தோன்றியிருப்பது பெரிய விஷயம். இது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம்தான். பாசிட்டிவாக எடுத்துக்கொள்கிறேன்.”

கொரோனா தேவி சிலையை பார்த்தபோது யார் மாதிரி இருப்பதாக உங்களுக்குத் தோன்றியது?

“கொரோனா தேவி அம்மனை உற்றுப் பார்த்தபோது எனக்கும் அந்த சிலைக்கும் ஒற்றுமை இருந்த மாதிரியேதான் இருந்தது. நானே பார்த்திருந்தால் எனக்கு அப்படி தோன்றியிருக்காது. எல்லோரும் சொன்னதாலும் வைரல் ஆனபிறகு பார்த்ததாலும் ‘ஓ ஆமால்ல… நமக்கும் சிலைக்கும் எதோ ஒரு ஒற்றுமை இருக்க மாதிரியே தெரியுதே’ன்னு நினைச்சேன். ஆனால், என்னைப் பார்த்துதான் சிலையை அமைத்துள்ளார்கள் என்று சொல்ல மாட்டேன். நிறைய பேருக்கு கொரோனா தேவி வனிதாவாக தெரிந்திருப்பதை ஆசிர்வாதமாக எடுத்துக்கொள்றேன். என்னை மக்கள் ஞாபகம் வைத்துள்ளார்கள். அந்தளவுக்கு மனசுல இடம் பிடித்திருக்கிறேன் என்பதால்தானே ஞாபகம் வைத்து சொல்கிறார்கள்?”

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் சூழலில் இப்படி கோயில் அமைப்பது மூடநம்பிக்கையாக தெரியவில்லையா?

  “எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இருக்கு. எல்லாமே நம்பிக்கைதான். எதையும் மூட நம்பிக்கை என்று சொல்ல முடியாது. நிஜம், நிஜமில்லை என்பது யாருக்குத் தெரியும். ஒரு காலத்தில் அம்மையால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளார்கள். அம்மை போட்டாலே நம் ஐதீகத்தின்படி  மாரியம்மன் கோயிலுக்குச்சென்று நம்பிக்கையோடு கூழ் ஊற்றுவார்கள். இப்போதுவரை ஊற்றிகொண்டுதானே வருகிறார்கள்? இதனை மூட நம்பிக்கை என்று சொல்ல முடியாது. அதேபோலத்தான், கொரோனா  சூழலில் மக்கள் நம்பிக்கையோடு கொரோனா தேவி சிலையை அமைத்துள்ளார்கள். இதில் கமெண்ட் செய்ய ஒன்றுமே இல்லை.

கொரோனாவால் மக்கள் மனதளவில் தளர்ந்து போயுள்ளார்கள். அவர்களுக்கு, எதில் ஈர்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறதோ, அதில் ஈடுபாடு காட்டுகிறார்கள். அந்த நம்பிக்கையே உறுதியான பலத்தைக் கொடுக்கும். இதில், என்ன தவறு இருக்கிறது. இந்த விஷயத்தில் கமெண்ட் செய்ய யாருக்கும் உரிமையில்லை. ஆன்மிகத்தில் நம்பிக்கை கொள்வது பாசிட்டிவான விஷயம். எந்த சாமி, எந்த மதம் என்பதைத் தாண்டி ஆன்மிகத்துக்கு பெரிய சக்தி இருக்கிறது.”

கோயிலில் கூட்டம் கூடுவதே கொரோனாவை பரப்புமே?

   “எல்லா கோயிலும்தான், இப்போது மூடி வைத்துள்ளார்கள். இது மட்டுமா திறந்து வைக்கப்போகிறார்கள்? மக்கள் நம்பிக்கைக்கு நல்லது நடந்தால் சரி.”

ஊரடங்கு உங்களுக்கு எப்படி போகிறது?

”எல்லோரும் போல நாங்களும் அடங்கித்தான் உட்கார்ந்திருக்கிறோம். தமிழக அரசு எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி தந்துள்ளது. எல்லாமே கிடைக்கிறது. அதனால், அரசு பிறப்பித்துள்ள விதிகளை மக்கள் கடைபிடிக்கவேண்டும். சிலரின் கவனக்குறைவால் கொரோனா பரவுகிறது. இதனால், அதிகம் கஷ்டப்படும் குடும்பங்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இவை அனைத்தையும் தாண்டி நாம் கொரோனாவிலிருந்து வெளியில் வரவேண்டும்.

ரு சிங்கிள் மதராக நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

    “நான் என்றில்லை. குழந்தைகளை வளர்ப்பது என்பது எல்லா அம்மாக்களுக்குமே சவாலானதுதான். ஆனால், குடும்பத்தின் சப்போர்ட் இல்லாமல் தனியொரு மனுஷியாக குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு சிங்கிள் மதருக்கு மிகப்பெரிய சவாலான விஷயம். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் கடினமானது. குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் ஆரம்பித்து நமது பணியில் கவனம் செலுத்துவது என அனைத்திற்கும் ஒரு சப்போர்ட் தேவைப்படுகிறது.

     சிங்கிள் மதராக இருந்தாலும் சரி… இல்லையென்றாலும் சரி… நமக்கு எது முக்கியத்துவமோ அதைத்தான் பார்க்கவேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்..  இந்த சமூகம் என்ன சொல்லும் என்று நிறைய அழுத்தங்கள் இருக்கும். ஆனால், அந்த விஷயங்களையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு நமக்கு எது சந்தோஷம் கொடுக்கிறதோ, நம் குழந்தைகளுக்கு எது பாதுகாப்போ, அதில்தான் கவனம் செலுத்தவேண்டும். நம்ம வாழ்க்கை நம்ம கையில்தான் இருக்கு. அடுத்தவர்கள் கையில் கிடையவே கிடையாது. எந்தப் பிரச்சனையிலும் இதுவும் கடந்து செல்லும் என்றே நினைத்துக்கொள்வேன். எதுக்குமே ஒரு முடிவு கிடையாது. வாழ்க்கையும் அப்படித்தானே? ரொம்ப சந்தோஷமாக இருக்கும் ஒரு குடும்பத்திற்கு அடுத்தநாள் என்ன நடக்கும் என்றே தெரியாது. திடீர்னு சிதறிப்போய்டும். இது, இன்றைய காலக்கட்டத்தில் ஜாஸ்தியாத்தான் இருக்கு. நல்லதோ கெட்டதோ யாருக்கு என்ன ஆகும்னு சொல்லவே முடியாது. அதனால், எது நடந்தாலும் இதுவும் கடந்து போகும் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.”

சமீபத்தில் திருமண சர்ச்சையில் சிக்கியிருந்தீர்களே? அதிலிருந்து மீண்டுவிட்டீர்களா?

”கண்டிப்பாக மீண்டுட்டேன். இயல்பிலேயே நான் ரொம்ப உறுதியானவள். உறுதியான மனநிலை கொண்டவள். ஒரு விஷயத்தை வேண்டாம் என்று முடிவு செய்தால் வேண்டாம்தான். அதுவே, வேண்டும் என்று முடிவு செய்தால் அந்த விஷயம் வேண்டும்தான். யாருமே என் மனதை மாற்ற முடியாது. நமக்கு தேவையில்லாத விஷயம் என்று முடிவு செய்தபின்னர், அதிலிருந்து விலகுவது என்பது மனதின் வில் பவரால்தான் முடியும். நான் அதிலிருந்து மீண்டு, இப்போது சில விஷயங்களில் தெளிவாக இருக்கிறேன். இதனையெல்லாம் வாழ்க்கையின் அனுபவமாக நினைத்து உணர்ந்து வருகிறேன். நான் ரொம்ப ப்ராக்டிகல் கேர்ள். மற்றவர்களின் கருத்தை தலையாட்டி கேட்டுகொண்டாலும் என்னோட முடிவு மட்டும்தான் மனதில் இருக்கும்.”

திருமண சர்ச்சைக்குப்பிறகு பீட்டர் பாலிடம் பேசினீர்களா?

    “அதற்குப் பிறகு அவரிடம் பேசவில்லை. இனி பேசப்போவதும் இல்லை. குடும்பம் என்று வரும்போது நானும் அவரும் சேர்ந்து வாழ்வது சரியாக இருக்காது. அதனால், விலகிவிட்டேன். எனது சூழ்நிலை அப்படி. இதிலிருந்து நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டேன். லைஃப்ல நாம் நிறைய பேரை மீட் பண்ணுவோம். அதில், சில பேரை இழப்போம். சிலர் தொடருவார்கள்.  இதெல்லாம், வாழ்க்கையில் ஒரு பகுதிதான். ஆனால், நம்ம லைஃப் போய்ட்டேதான் இருக்கணும். ஒருத்தர் இல்லாததால நம்ம பயணத்தை முடித்துக்கொள்ள முடியாதல்லவா?”.

அவசரப்பட்டுவிட்டோம் என்று இப்போது நினைக்கிறீர்களா?

   “நிச்சயமா கிடையாது. நான் அவசரப்பட்டு எந்தப் பிரச்னையும் ஆகலையே? நான் ஒருவரை சந்தித்தேன். அதிலிருந்து கடந்து வந்துவிட்டேன். தவறு ஒன்றுமே நடக்கவில்லை. அதனால,  பிரச்னை இல்லை. எடுத்த முடிவில் ஏதாவது தவறு நடந்திருந்தால் மனதை ரொம்ப பாதித்திருக்கும். நான் அவரது உயிரை காப்பாற்றித்தான் இருக்கிறேன். இதற்காக பெருமைப்படவும் செய்கிறேன்.”

உங்களது  திருமணங்களுக்காக நீங்கள்  அடிக்கடி விமர்சிக்கப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

     “அவரவர்களுக்கு எது சரியோ அதைத்தான் செய்ய முடியும். வாழ்க்கை  சட்ட புத்தகம் அல்ல. நீங்க இப்படித்தான் வாழணும் என்ற கட்டாயமும் இல்லை. அதனால், நமக்கு எது சரின்னு படுதோ, நமக்கு எது ஒர்க் அவுட் ஆகுதோ அதைத்தான் நாம் பார்க்கவேண்டும். வேலை வெட்டி இல்லாதவர்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள். அதற்காக, கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கையை பார்க்க முடியாது. விமர்சிப்பவர்களால் வனிதாவை விமர்சிக்க மட்டும்தான் முடியும். வனிதாவாக தனியொரு மனுஷியாக குழந்தைகளை வளர்த்துக்கொண்டு சவாலாக வாழ்ந்து காட்ட முடியாது. விமர்சிப்பவர்களின் வாழ்க்கையில் நடக்கும் தவறான விஷயங்களை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதனால், மற்றவர்கள் அதனைச் செய்யும்போது இப்படியெல்லாம் பேசுகிறார்கள். நான், இவர்களின் பேச்சுக்களை கண்டுகொள்ளவே மாட்டேன். இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே கிடையாது. நாம் கஷ்டப்படும்போது விமர்சிப்பவர்களா வரப்போகிறார்கள்?”

படங்கள் குறித்து?

அனல்காற்று, அந்தகன் என இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். அடுத்தும் ரெண்டு மூன்று படங்கள் பண்ணிக்கொண்டிருக்கிறேன். இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் வெளிவரும்.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com