ராம் பெயர் எழுதப்பட்ட மேலாடை: நடிகை வாணி கபூருக்கு எதிராக புகார்
ராமரின் பெயர் எழுதப்பட்ட மேலாடையை அணிந்ததற்காக நடிகை வாணிகபூர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை வாணி கபூர். இவர், தமிழில் நானி ஜோடியாக, ‘ஆஹா கல்யாணம்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தனது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ராம், ராம் என்று இந்தியில் எழுதப்பட்டிருந்த மேலாடையை கிளாமராக அணிந்திருந்தார். இந்தப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதோடு, சர்ச்சையும் கிளம்பியது. ராமரின் பெயர் எழுதப்பட்ட மேலாடையை, எப்படி அணியலாம் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடும் கண்டனங்களும் எழுந்தன. இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டன.
சிலர் இனி, நீங்கள் நடிக்கும் படங்களை பார்க்கவே மாட்டோம் என்றும் வணிகரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு எங்கள் உணர்வுகள் புரியாது என்றும் இதற்காக வெட்கப்பட வேண்டும் என்றும் சிலர் திட்டியிருந்தனர்.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த ராமா சாவந்த் என்பவர், ஜோஷிமார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘ராமரின் பெயர் எழுதப்பட்ட அரைகுறை ஆடை அணிந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை வாணி கபூர். இதன் மூலம் இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறியுள்ளார்.