மோகினி, சதுரங்க வேட்டை- 2, கர்ஜனை, 1818, சாமி 2, ஹே ஜூட், 96 என ஏழு படங்களை கைவசம் வைத்துள்ளார் த்ரிஷா. இந்த 7 படங்களும் இந்த ஆண்டு வெளிவரும் படங்கள் என த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
த்ரிஷா தற்போது டூயட் பாடும் நாயகி ரோலில் இருந்து சற்று மாறுபட்டு வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில், மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் மோகினியில், அவதார் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல நீல நிற முகத்துடன் ஆக்ரோஷமாக நடித்துள்ளார்.
முதன்முறையாக விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் ஜோடி சேரும் படம் தான் ‘96’. பிரேம் குமார் இயக்கத்தில் காதல் படமாக உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் காதலர் தினத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வினோத் இயக்கத்தில் சதுரங்க வேட்டை 2 படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார். வித்தியாசமான கதைக்கருவுடன் உருவாகும் இப்படத்தில் த்ரிஷாவின் ரோல் மாறுபட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘என்.ஹெச் 10’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘கர்ஜனை’ படத்திலும் த்ரிஷா வித்தியாசமான ரோலில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குர் சுந்தர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக டிவி நடிகர் அமித் பார்கவ் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து ‘சாமி 2’ படத்திலும் த்ரிஷா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இது தவிர ஹே ஜூட் எனும் மலையாள படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா. மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை மையப்படுத்தி உருவாகும் ‘1818’ என்ற பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார் த்ரிஷா. தமிழில் மட்டுமின்றி வெவ்வேறு மொழிகளில் பல கெட்டப்பில் நடித்துவரும் த்ரிஷாவின் இந்த 7 படங்களும் இந்த ஆண்டு வெளிவரும் என த்ரிஷா தெரிவித்துள்ளார்.