“உங்களுடைய ராம் யார்?” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்
தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நடிகை த்ரிஷா பதில் அளித்துள்ளார்.
த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘96’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் த்ரிஷாவும், விஜய் சேதுபதி ஏற்றிருந்த ‘ஜானு’, ‘ராம்’ என்ற காதாபாத்திரங்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். கேரளாவில் வெளியான ப்ரேமம் படத்தினை தமிழக ரசிகர்கள் கொண்டாடியது போல், ‘96’ படத்தினை கேரள இளைஞர்கள் கொண்டாடினார்கள். படத்தில் த்ரிஷா அணிந்திருந்த மஞ்சள் நிற சுடிதார் விற்பனைக்கு வரும் அளவிற்கு அந்த கதாபாத்திரத்தின் தாக்கம் இருந்தது. த்ரிஷாவின் நடிப்பும் எல்லோராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், நடிகை த்ரிஷா இன்று தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்தார். அதில், திருமணம் குறித்து பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு பட்டும், படாமல் பேசி கேள்வியை தவிர்த்தார்.
சில கேள்விகளும், த்ரிஷாவின் பதில்களும்:-
- உங்களது ட்விட்டர் அக்கவுண்ட்க்கு அட்மின் இருக்கிறாரா?
இல்லை. நானேதான் எனது ட்விட்டரை பதிவிடுகிறேன்.
- உங்களுடைய ட்விட்டர் கணக்கு சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டதே? சரியாகி விட்டதா?
ஆம், சரியாகிவிட்டது. எப்படி நடந்து என்றே தெரியவில்லை. எல்லாவற்றையும் ரெப்ரஸ் செய்துவிட்டேன். இனி வருவதை பார்க்கலாம்.
- உங்களுடைய பள்ளி பருவ ‘ராம்’ யார்? சமீபத்தில் உங்களை கவர்ந்தவர் யார்?
படித்தது பெண்கள் பள்ளியில் தான். நான் இன்னும் என்னுடைய ராம்-ஐ பார்க்கவில்லை.
- த்ரிஷா என்பதற்கு பதிலாக உங்களை ஜானு என்று அழைக்கலாமா?
நல்லது. அப்படியே கூப்பிடுங்கள்.
- என்னென்ன படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
பேட்ட படத்தின் படபிடிப்பு இப்பொழுதுதான் முடிந்தது. பரமபதம் படம் முடிந்து கொண்டிருக்கிறது.
- ‘96’ படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள்?
இரண்டு முறை.
- உங்களுடைய அடுத்த ‘J’ (ஜானு, ஜெஸ்சி) மேஜிக் எப்பொழுது?
இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
- சிம்பு உடன் விடிவி-2 படத்தில் நடிப்பீர்களா?
விடிவி-2 படம் தற்போது உருவாகும் வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.
- உங்களுடைய சோகமான தருணங்களை எப்படி கடந்தீர்கள்?
காலம் தான் எல்லாவற்றிற்கும் மருந்து.
- உங்களுடைய வாழ்க்கையில் இன்னும் மர்மமாக இருக்கும் விஷயம்?
மனிதர்கள்.
- ஒரு நடிகராக உங்களிடம் சிறப்பு என்ன?
போட்டியிட விரும்பாதது.
- முதல்முறையாக கொடி படத்தில் நெகடிவ் பாத்திரத்தில் நடத்தது எப்படி இருந்தது?
கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அவ்வளவுதான்.