அதையே குற்றம் சொல்லிட்டு இருக்காதீங்க: டாப்ஸி தடார்
சினிமாவில் பாரபட்சமாக நடந்துகொள்வார்கள் என்பது உண்மைதான். அது தெரிந்துதான் நடித்துக்கொண்டிக்கிறோம் என்று நடிகை டாப்ஸி சொன்னார்.
தமிழில், ஆடுகளம், ஆரம்பம், வந்தான் வென்றான், முனி 2 உட்பட சில படங்களில் நடித்தவர் டாப்ஸி. இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்துள்ள ’நாம் ஷாபனா’ என்ற படம் வரும் 31-ம் தேதி வெளியாகிறது. படம் பற்றி அவர் கூறும்போது, ‘இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்ட படம். இதில் ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளேன். இதற்காக பிரெஞ்ச் ஆக்ஷன் இயக்குனர் சிரில், எனக்குப் பயிற்சி அளித்தார். சண்டை காட்சிகளைப் படமாக்கும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில ஏற்பாடுகளை செய்திருந்ததால் எனக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை’ என்றார்.
சினிமாவில் பாரபட்சம் காட்டுவது அதிகரித்துவருகிறது என நடிகை கங்கனா ரனவத் சமீபத்தில் சொல்லியிருந்தது பற்றிய கேள்விக்கு, ’சினிமாவில் பாரபட்சம் என்பது சகஜம்தான். அதெல்லாம் தெரிந்துகொண்டுதான் சினிமாவுக்கு வந்தேன். பாரபட்சத்தால் சில வாய்ப்புகளை இழக்கலாம். அதற்காக, அதையே குற்றமாகச் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. இது ஒரு விளையாட்டு. இதில் பாரபட்சம் என்பதும் ஒரு பகுதி’ என்றார் டாப்ஸி.