யார் இந்த ஸ்ரீரெட்டி ? புது தலைவலியில் தமிழ் திரையுலகம்
தெலுங்கு திரையுலகில் முக்கிய பிரமுகர்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ்ப் பிரபலங்கள் குறித்து கருத்து பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பட வாய்ப்பு தருவதற்காக நடிகைகளை பாலியலுக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையுலகில் உள்ளதாக தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், அதற்கான ஆதாரங்களை SRI REDDY, SRI LEAKS என்றை வலைபக்கத்தில் பதிவிட்டு தெலுங்கு சினிமாவில் புயலைக் கிளப்பினார். பட வாய்ப்பு தருவதற்காக முக்கிய பிரமுகர் சிலர் தம்மை பாலியலில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டது என கூறியது முதல் தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளவில்லை என்பது வரை அவரது குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே சென்றன. இவற்றுக்கெல்லாம் கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாணப் போரட்டம் நடத்தி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தினார்.
தற்போது ஸ்ரீரெட்டியின் முகநூலிலும், TAMIL LEAKS எனும் வலைப் பக்கத்தில் பதிவிடப்படும் தகவல்கள் தமிழ் சினிமாவிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோரும், தற்போது ஸ்ரீ ரெட்டியின் பட்டியலில் இடம்பிடித்துள்ள நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது மறைமுக குற்றச்சாட்டையும் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ரெட்டியின் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு இம்மூவரும் இதுவரை வெளிப்படையாக, மறுப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. இதற்கிடையே, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஷாலிடம்இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, ரகசியங்களை தொடர்ந்து வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர், ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். திரையுலகினர் தனிமனித ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுரை கூறியுள்ளார்.