”மோகன் பாபுவுடன் எந்த நிலத்தகராறும் இல்லை” - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சவுந்தர்யா கணவர்!
1990களில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி நட்சத்திர நடிகையாக கொடிகட்டிப் பறந்தார் செளந்தர்யா. 2004 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பிரசாரத்துக்காக பெங்களூரிலிருந்து கரீம்நகருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் சௌந்தர்யாவும் அவரது சகோதரரும் இறந்தனர். செளந்தர்யா உயிரிழந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், நடிகர் மோகன்பாபுதான் அவரது மரணத்துக்குக் காரணம் என்று தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சத்யநாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் எடுரு கட்லா சிட்டிமல்லு என்பவர் காவல்துறையிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்திருக்கிறார்.
அந்தப் புகாரில், ‘ஐதராபாத் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் செளந்தர்யாவுக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை நடிகர் மோகன்பாபு கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்துவிட்டதாகவும் சிட்டிமல்லு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோகன்பாபு, சௌந்தர்யாவையும் அமர்நாத்தையும் கொலை செய்து விமான விபத்து போல் சித்தரித்துவிட்டதாகவும் சிட்டிபாபு குற்றம்சாட்டியுள்ளார். செளந்தர்யா இறந்த பிறகு அந்த நிலத்தை, நடிகர் மோகன்பாபு ஆக்கிரமித்து விருந்தினர் மாளிகையை கட்டியுள்ளதாகவும் அந்த நிலத்தை அரசாங்கம் உடனடியாகக் கையகப்படுத்த வேண்டும்’ என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகை சவுந்தர்யாவின் கணவர் ரகு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர், “மறைந்த என் மனைவியிடம் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக எந்தவொரு சொத்தையும் மோகன் பாபு வாங்கவிலை. அவருடன் எந்த நிலத்தகராறும் இல்லை. அவரை, கடந்த 25 வருடங்களாக எங்கள் குடும்பத்துக்கு தெரியும்; நாங்கள் நல்லதொரு உறவைப் பகிர்ந்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள சொத்து குறித்து ஸ்ரீமோகன் பாபு மற்றும் ஸ்ரீமதி சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரமற்ற செய்தியை நான் மறுக்க விரும்புகிறேன். ஸ்ரீமோகன் பாபு, எனது மனைவி மறைந்த ஸ்ரீமதி சௌந்தர்யாவிடமிருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் வாங்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
எனக்குத் தெரிந்தவரை அவருடன் நாங்கள் எந்த நில பரிவர்த்தனையும் செய்யவில்லை. கடந்த 25+ ஆண்டுகளாக நான் ஸ்ரீமோகன் பாபுவை அறிவேன். உங்கள் அனைவருடனும் உண்மையைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். நாங்கள் ஒரு நல்ல உறவைப் பகிர்ந்து கொள்கிறோம், இது ஒரு தவறான செய்தி என்பதால், இதைப் பரப்புவதை நிறுத்துமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.