சிகிச்சைக்கு பணமின்றி மருத்துவமனையில் வாடும் முன்னாள் ஹீரோயின்!
டீ குடிக்கக் கூட காசில்லாமல் முன்னாள் ஹீரோயின் ஒருவர், மருத்துவமனையில் போராடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சல்மான் கானின் இந்தி படமான வீர்காடி (Veergati) படத்தில் ஹீரோயின்களில் ஒருவராக நடித்தவர் பூஜா தட்வால். அடுத்து, ஹிந்துஸ்தான், சிந்தூர் கி சவுகந்த் உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர்,குடும்பத்துடன் கோவாவில் வசித்து வந்த இவருக்கு இப்போது நுரையீரல் தொடர்பான நோய் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது டிபி என்று தெரிய வந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள செவ்ரி டிபி மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அவர் உடல்நிலை மோசமானதை அடுத்து, கணவர் மற்றும் குடும்பத்தினர் நடிகையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
இதை எதிர்பார்க்காத பூஜா, டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் பரிதவித்து வருகிறார். மருத்துவமனையில் உள்ள சிலர் பரிதாபப்பட்டு அவருக்கு சாப்பாடு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், தன்னுடன் நடித்த சல்மான் கானிடம் உதவி கேட்கலாம் என்று தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். சின்ன சின்ன ஹீரோக்களை சந்திக்கவே பெரும்பாடு பட வேண்டிய நிலையில் சூப்பர் ஸ்டார் நடிகரை சந்தித்துவிட முடியுமா என்ன? முடியவில்லை.
இதையடுத்து வீடியோ ஒன்றில் தன் நிலையை விளக்கி பேசியுள்ள பூஜா, தனக்கு உதவுமாறு சல்மான் கானுக்கு கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்துள்ளார். அந்த வீடியோவை சில இந்தி மீடியாவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதுபற்றி பூஜா கூறும்போது, ‘சினிமாவில் இருந்து விலகியதும் கோவாவில் கேசினோ ஒன்றை கடந்த சில வருடங்களாக நிர்வகித்து வந்தேன். ஆறு மாதத்துக்கு முன்பே, எனக்கு டிபி நோய், சீரியசாகிவிட்டது என்பது தெரிந்தது. என்னிடம் மருந்து வாங்க கூட பணமில்லை. இதனால் சல்மான் கானிடம் உதவி பெற முயற்சி செய்தேன். அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. என் வீடியோவை பார்த்தால் அவர் கண்டிப்பாக உதவி செய்வார்’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஹீரோயின் ஒருவர் பணமின்றி மருத்துவமனையில் பரிதாபமாக இருப்பது இந்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.