இந்தியில் பேச வேண்டுமா? கண்கள் சிவக்க செய்தியாளர்களிடம் கோபப்பட்ட கஜோல்.. ஏன் தெரியுமா?
பாலிவுட் நடிகை கஜோல் மும்பையில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள் 2025 விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஒரு செய்தியாளாரிடம் பேசியபோது நடிகை தனது பொறுமையை இழந்துள்ளார். இந்த நிகழ்வில், இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக மதிப்புமிக்க ராஜ் கபூர் விருது வழங்கப்பட்டது. இருப்பினும், ஊடகங்களுடனான அவரது உரையாடலின் போது, ஒரு நிருபர் அவரை இந்தியில் பேசச் சொன்னபோது, அவர் கண்கள் சிவக்க கோபமாக பதிலடி கொடுத்தார்.
அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. அந்த வீடியோவில் கஜோல் செய்தியாளர்களிடம் மராத்தியில் பேசுவதைக் காணலாம், விருதை 'பெரிய விஷயம்' என்று அழைக்கிறார். இருப்பினும், ஒரு நிருபர் தனது வார்த்தைகளை இந்தியில் திரும்பத் திரும்பச் சொல்லச் சொன்னபோது, கஜோல் எரிச்சலடைந்து கோபமாக இப்போது நான் இந்தியிலும் பேச வேண்டுமா என்று கேட்டார். அத்துடன் நான் சொன்னதைப் புரிந்துகொள்ள விரும்புவோர் அதை புரிந்துக் கொள்ளட்டும் என்றார்.
இது குறித்து சமூக ஊடகங்களில் பலர் கஜோலின் நடத்தையையும் , அவர் இந்தியில் பேச மறுப்பதையும் ஏற்கவில்லை . ஒருவர், "அப்படியானால் ஏன் நீங்கள் இந்தியில் படங்கள் எடுக்கிறீர்கள்?" என்று கேட்டனர். மற்றொருவர், "அவரை இந்தி படங்கள் செய்வதை நிறுத்தச் சொல்லுங்கள் அவர் மராத்தி படங்கள் மட்டுமே நடிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
விருது வழங்கும் விழாவில், கஜோல் தனது தாயின் கருப்பு மற்றும் வெள்ளை சேலையை அணிந்திருந்தார். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸிடமிருந்து விருதைப் பெற்று , சரளமான மராத்தியில் தனது ஏற்புரையை பேசினார். "இன்று எனது பிறந்தநாள்" என்று விருதைப் பெற்ற பிறகு ரசிகர்களிடம் கூறினார். கஜோல் தனது தாயார் தனுஜாவுடன் விழாவில் கலந்து கொண்டு, தனது தாயார் பல ஆண்டுகளுக்கு முன்பு இதே விருதைப் பெற்றதாகவும், இப்போது அதைப் பெற்றிருப்பது அந்த தருணத்தை இன்னும் சிறப்பானதாக்கியது என்றும் கூறினார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி பேசுபவர்களுக்கும் இந்தி பேசும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. நடிகை கஜோலும் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்பதால் இந்தி மொழி குறித்த இந்த கருத்து கவனிக்க வேண்டியவையாக இருக்கிறது.