போதைப்பொருள் வைத்திருந்ததாக நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் ரோனி கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, தெலுங்கு திரையுலக நட்சத்திரங்களான நடிகர் நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் ஆந்திராவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், காஜல் அகர்வாலிடம் வெகுநாட்களாக மேனேஜராக இருந்து வரும் ரோனி, அவரது வீட்டிற்குள் காஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் ரோனிக்கு தொடர்பிருக்கிறதா என்கிற கோணத்தில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதுசெய்யப்பட்டுள்ள ரோனி தெலுங்கு திரையுலக நடசத்திரங்கள் பலருக்கும் மேனேஜராக பணியாற்றி இருக்கிறார். இந்த விவகாரத்தால் நடிகை காஜல் அகர்வாலுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் விரைவில் வெளியாக உள்ள விஜயுடன் மெர்சல் படத்திலும், அஜித்துடன் விவேகம் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.