தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறதோ..? நடிகை கவுதமி சந்தேகம்

தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறதோ..? நடிகை கவுதமி சந்தேகம்
தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறதோ..? நடிகை கவுதமி சந்தேகம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த தனது கேள்விக்கு இதுவரை பிரதமர் மோடி பதிலளிக்காமல் இருப்பது, தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறதோ என்ற எண்ணத்தை தனக்கு ஏற்படுத்தியுள்ளதாக நடிகை கவுதமி கூறியுள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உயிரிழந்தார். முதலமைச்சரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையான விவரங்கள் வெளிவர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமருக்கு டிசம்பர் 8-ஆம் தேதி நடிகை கவுதமி கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அந்தக் கடிதத்துக்கு இன்னும் பிரதமர் தரப்பிலிருந்து விளக்கம் வரவில்லை.

இந்நிலையில் தனது கடிதத்திற்கு பிரதமர் இத்தனை நாட்களாகியும் விளக்கம் தராதது ஏன் என நடிகை கவுதமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கடந்த 8-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன். இது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுபவர். அப்படிப்பட்டவருக்கு நான் எழுதிய கடிதம் மீடியா வழியாக தெரிந்த பிறகும் கூட, அதற்கான பதிலை அவரோ, அவரது அலுவலகமோ இதுவரை தெரிவிக்கவில்லை.

பிரதமர் மோடியை நான் பெரிதும் மதிக்கிறேன். அனைத்து குடிமகன்களும் பிரதமர் முன் சமம் என்றால், ஏன் எனது கேள்வியை பிரதமர் புறக்கணிக்கிறார்? தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம் அனைத்துத் துறைகளிலும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் நிலவுகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பலரும் அவரது உடல்நலம் விசாரிக்க நேரில் சென்றனர். ஆனால் ஒருவர் கூட அவரது உடல் நிலை பற்றிய உண்மையைத் தெரிவிக்கவில்லை.

வர்தா புயலால் தமிழக மக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் தங்கள் கலாச்சார அடையாளத்தை மீட்டெடுக்க பெரும் போராட்டத்தை நடத்தினர். அரசு தங்கள் அழுகைக்கு செவி சாய்க்கவில்லை என்ற வேதனையில் பல விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இத்தகைய துயரங்களுக்குப் பிறகாவது மத்திய அரசிடமிருந்து தமிழக மக்களுக்கு ஆறுதலான செய்தி ஏதாவது வரும் என்று எதிர்பார்த்தோம். ஒருவரது கேள்விக்கு பதில் கிடைக்க தாமதமானால் பரவாயில்லை... ஆனால் பதிலே கிடைக்கவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்த தகவல்களை எந்த ஒளிவு மறைவுமின்றி வெளியிட வேண்டுமல்லவா? இதைத் தெரிந்து கொள்ளவும் தெருவில் இறங்கிப் போராட வேண்டுமா?” என்று ஆவேசமாகக் கேட்டுள்ளார் கவுதமி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com