சாம்பிகா என்றால் என்ன? விளக்குகிறார் ’அண்ணாதுரை’ ஹீரோயின்
விஜய் ஆண்டனி, டயனா சம்பிகா நடித்துள்ள படம், ’அண்ணாதுரை’. விஜய் ஆண்டனியின் பிலிம் கார்பரேஷன் நிறுவனமும் ராதிகா சரத்குமாரின் ஆர். ஸ்டுடியோஸும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 30-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ராதாரவி, காளி வெங்கட், நளினிகாந்த், ஜிவெல் மேரி, ரிந்து ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். தில்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி டயனா கூறும்போது, ’சம்பிகா என்றால் இளவரசி என்று அர்த்தம். அப்படித்தான் வாழ விரும்புகிறேன். என்னை கதாநாயகியாக தேர்ந்து எடுத்த பாத்திமா விஜய் ஆண்டனிக்கு நன்றி. இந்தப் படத்தில் ரேவதி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். பெயர் ராசியோ என்னவோ படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்த நல்ல பெயருக்கு இயக்குனர் ஸ்ரீனிவாசன் முக்கிய காரணம். இயல்பாக நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். ஸ்ரீதேவி போல ஸ்டைல், நயன்தாரா போல திரை ஆளுமை, த்ரிஷா போல என்றும் நிலைத்து, ஐஸ்வர்யா பச்சன் போல அனைவரையும் கவரும் வண்ணம் திரை உலகில் நீடிக்க வேண்டும் என்பது ஆசை. அது நிறைவேறும்’ என்கிறார் டயானா சம்பிகா.