போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, நடிகர்கள் நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
போதை பொருள் கடத்தல் தொடர்பாக, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கெல்வின் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் ஐதராபாத்துக்கு போதை பொருட்களை கடத்தி வந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர், நடிகைகளுக்கு சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். பியூஸை கைது செய்த போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அதில் ஏராளமான நடிகர், நடிகைகள் எண்கள் இருந்தன. போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்புடைய அவர்கள் பெயர்களை போலீசார் வெளியிடவில்லை. அதில் நடிகர்கள் நவ்தீப், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட திரைப்படத்துறையைச் சேர்ந்த 12 பெயர்கள் இருப்பதாக தெலுங்கு சேனல்கள் நேற்று செய்தி வெளியிட்டன.
இதுபற்றி சார்மி கூறும்போது, ‘உங்களை கீழே தள்ள நினைக்கிறார்கள் என்றால், நீங்கள் அவர்களை விட உயரத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்’ என்று தத்துவமாகக் கூறியுள்ளார்.
நடிகை முமைத்கான் கூறும்போது, ’ எனக்கும் போதைப் பொருளுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. ஒரு நாளும் நான் அதை உட்கொண்டதில்லை. உட்கொள்ளப் போவதுமில்லை’ என்று தெரிவித்துள்ளார். இதே போல நவ்தீப், தனிஷ் ஆகியோரும் மறுத்துள்ளனர்.