நடிகை பாவனா துன்புறுத்தல் விவகாரம்: அடுத்து அப்புண்ணியைத் தேடுகிறது போலீஸ்
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் மேனேஜர் அப்புண்ணியை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.
ஜனப்பிரிய நாயகனாக மலையாள திரை உலகில் கலக்கிக்கொண்டிருந்த நடிகர் திலீப், நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருக்கிறார். இதனிடையே நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனை நேற்று ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று 3 மணிநேரத்திற்கும் மேலாக போலீஸ் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் படப்பிடிப்பு ஒன்றில் ரசிகர் ஒருவர் திலீப்புடன் எடுத்துக்கொண்ட செல்பியின் பின்னால் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் நிற்பது பதிவாகி உள்ளது. இதுவும் இவ்வழக்கில் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், திலீப்பின் மேனேஜர் அப்புண்ணி, திலீப்புக்கும், முக்கிய குற்றவாளி பல்சர் சுனில்க்கும் இடையே பாலமாக செயல்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்புண்ணியின் தொலைபேசியில் இருந்து பல்சர் சுனில் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு பேசியது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே சிறையில் உள்ள பல்சர் சுனில் பணம் கேட்டு மிரட்டுவதாக அப்புண்ணியும், திலீப்பின் நண்பர் நாதிர்ஷாவும் அண்மையில் போலீசாரிடம் புகார் கூறியதையடுத்து, இருவரிடமும் 12 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. இதையடுத்தே திலீப் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து அப்புண்ணி தலைமறைவாக இருந்து வருகிறார். அவரது ஐந்து செல்போன் எண்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் போலீசாரின் சந்தேகம் வலுத்துள்ளது