பாவனா வழக்கில் திடீர் திருப்பம்: நடிகர் திலீப்பிடம் விசாரணை!
நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் நடிகர் திலீப்பிடம் விசாரணை நடத்த இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை பாவனா, பாலியல் தொல்லைக்கு ஆளானது தொடர்பாக ரவுடி பல்சர் சுனில், பாவனாவின் டிரைவர் மார்ட்டின் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நடிகர் திலீப்பின் நெருங்கிய நண்பரும் நடிகருமான நாதிர் ஷா போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், ’சிறையில் பல்சர் சுனிலுடன் இருந்ததாக கூறிய விஷ்ணு என்பவர் எனக்கு போன் செய்தார். பாவனா வழக்கில் நடிகர் திலீப் பெயரை சேர்க்க வேண்டும் என்று சிலர் கூறுவதாகவும் அதற்காக சுனிலுக்கு 2.50 கோடி ரூபாய் தருவதாகவும் சிலர் பேசி வருகின்றனர். அப்படி திலீப் பெயரை சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் ஒன்றரை கோடி ரூபாய் தர வேண்டும். அதை நீங்களே வாங்கி தரவேண்டும்’ என்று மிரட்டியதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி பல்சர் சுனில், நடிகர் திலீப்பிற்கு எழுதியதாக ஒரு கடிதம் நேற்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில், எர்ணாகுளம் சிறையின் சீல் பதிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ’திலீப் அண்ணா, நான் சரணடைவதற்கு முன் உங்களை சந்திக்க முயன்றேன். முடியவில்லை. என் வாழ்க்கை என்ன ஆனாலும் கவலையில்லை. ஆனால் என்னை நம்பி இந்த வழக்கில் சிக்கிய மற்ற 5 பேரையும் காப்பாற்றியாக வேண்டும். எனக்கு தருவதாகக் கூறிய பணத்தை உடனடியாக தர வேண்டும். மொத்தமாக தர முடியாவிட்டாலும் 5 தவணைகளாக தரவேண்டும். இனியும் என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. உங்களை நான் இதுவரை கைவிடவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கடிதம் பல்சர் சுனில் எழுதியது இல்லை என்று தெரியவந்துள்ளது. அவரது கையெழுத்தும் கடிதத்தில் இருக்கும் கையெழுத்தும் வித்தியாசமாக இருப்பதால் வேறு யாரோதான் இந்தக் கடிதத்தை எழுதி இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்தக் கடிதம் தொடர்பாக கேரள போலீசார் நடிகர் திலீப்பிடம் விசாரணை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.